'விடிய விடிய வெப்சீரிஸ்...' 'நடக்க இருந்த மிகப்பெரும் அசம்பாவிதம்...' - 75 பேரை காப்பாற்றிய ஹீரோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தின் டோம்பிவ்லி நகரில், 18 குடும்பங்கள் வசிக்கும் பழைய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.
நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கட்டிடம் இடிந்து விழுந்தும், யாரையும் பாதிக்கப்படாமல் அனைவரையும் குணால் மோஹித் என்ற 18 வயது இளைஞர் காப்பாற்றியுள்ளார்.
குணால், இரவு முழுக்க வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். அதே போல் சம்பவம் நடந்த அன்றும் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அதிகாலை 4 மணியளவில் வீட்டின் சமையலறையில் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து சரிவது தெரிய வந்துள்ளது. உடனே தனது குடும்ப உறுப்பினர்களை எழுப்பி நடக்க போகும் விவரத்தை முன்னரே குணால் தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த கட்டடத்தில் வசிக்கும் அனைவருக்கும் உடனடியாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அனைவரும் உடனே வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதன்மூலம் அந்த கட்டிடத்தில் வசித்த 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தரப்பில் இந்த கட்டிடம், 9 மாதங்களுக்கு முன்பே ஆபத்தான நிலையில் இருப்பதாக காலி செய்ய அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு குணால் மோஹித் அளித்த போட்டியில் “அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் இங்கு வசிக்கும் அனைவரும் ஏழ்மையானவர்கள். எனவே யாரும் இங்கிருந்து வேறு வீட்டிற்கு செல்ல முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
குணால் மோஹித் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்ததால் மட்டுமே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் குணாலுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.