"அதுதானா.. சீக்கிரம் மேலே கொண்டுவாங்க".. உற்சாகத்தில் கத்திய ஆராய்ச்சியாளர்கள்.. 2000 வருஷத்துக்கு முன்னாடி கடலில் மூழ்கிய பொக்கிஷம்..வெளியே வந்த உண்மை.!
முகப்பு > செய்திகள் > உலகம்ரோமானிய பேரரசு காலத்தில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷத்தை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
எவ்வளவு பார்த்தாலும் சலிக்காதது கடல். மனித குலம் தோன்றுவதற்கு முன்னரே உலகில் தோன்றிவிட்ட கடல்கள் பல ஆச்சரியகரமான மற்றும் அதிர்ச்சியான மர்மங்களை தன்னிடத்தே கொண்டிருக்கின்றன. கடல் வாணிபத்தில் மனிதர்கள் ஈடுபட துவங்கிய பிறகு, கப்பல் போக்குவரத்து உலகம் முழுவதும் அதிகரிக்க துவங்கியது. அதேநேரத்தில் அசாதாரணமான காலநிலை, கப்பல் கொள்ளையர்களின் தாக்குதல், நாடுகளுக்கிடையேயான போர் ஆகியவற்றின் காரணமாக கப்பல்கள் விபத்தில் சிக்கி கடலில் மூழ்கிய ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன.
இந்த கப்பல்களோடு மூழ்கிப்போன அரிய பொருட்களை கண்டறிய இன்றும் பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. இதற்காக பல மில்லியன் டாலர்களும் செலவழிக்கப்பட்டுகின்றன. அந்தவகையில் மத்திய தரைக்கடலில் ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அமைந்துள்ள ஏஜியன் கடலில் இருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்களை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஹெர்குலிஸ்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக, ரோமானிய பேரரசு காலத்தில் ஏஜியன் கடலில் மூழ்கிப்போன கப்பல் முதன்முறையாக 1900 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு துண்டுகளாக உடைந்து கடலில் மூழ்கிப்போன இந்த கப்பலை அப்போதிலிருந்து ஆய்வு செய்துவருகிறார்கள் நிபுணர்கள். இந்நிலையில் இந்த கப்பலில் இருந்து ஹெர்குலிஸ் சிலையின் தலை பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரேக்க புராணங்களின்படி வலிமைவாய்ந்த கடவுளாக கருதப்படும் ஹெர்குலிஸ்-ஐ மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த தலை பகுதியானது கடல் நீரினால் அரிக்கப்பட்டிருந்தாலும் அது ஹெர்குலிஸின் தலைப்பகுதி தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடலுக்கடியே இது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே கப்பலில் இருந்த ஆராய்ச்சியாளர்கள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்திருக்கின்றனர்.
தலை
கிரேக்க தீவான ஆன்டிகிதெராவில் உள்ள க்ளைபாடியா என்னும் பகுதியில் இருந்து இந்த தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏதென்ஸில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் தலையற்ற ஹெர்குலஸின் சிலை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தலைப்பகுதி அந்த சிலையில் இருந்து உடைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.
இதனுடன், பழங்கால பொருட்கள் சிலவும் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டறியப்பட்டிருக்கின்றன. அதில், ஒரு பொருளில் மனித பல் இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அந்த பல்லை டின்ஏ ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிப்போன, கப்பலில் இருந்து கிரேக்க கடவுளான ஹெர்குலஸின் தலை பகுதி கண்டறிப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.