‘பிளாஸ்மா தெரபி மூலம்’... ‘பூரண குணமடைந்த முதல் இந்தியர்’... ‘12 நாளில் வென்டிலேட்டரில் இருந்து ஹோம் க்வாரன்டைன்’... ‘மருத்துவர்கள் சாதித்தது எப்படி?’...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி பூரண குணமடைந்து 12 நாட்களில் வீடு திரும்பினார்.
டெல்லியை சேர்ந்த 49 வயது நபர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால், டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவரின் உடல் நிலை மோசமடைய தொடங்கியது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் தொடர் சிகிச்சைகள் எந்த முன்னேற்றத்தையும் தராமல், நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசடைந்து கொண்டே சென்றது.
இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் அவருக்கு பிளாஸ்மாக சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அவரது குடும்பத்தினரே பிளாஸ்மா தானக் கொடையாளியையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பிளாஸ்மா தர முன்வந்த பெண் சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டார். ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதால், வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவருக்கு, பிளாஸ்மா எடுப்பதற்காக 3-வது முறையாக மருத்துவ பரிசோதனை நடத்தி, அதிலும் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.
அதன்பிறகே அந்தப் பெண்ணிடம் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 49 வயதான நபருக்குக் கடந்த 14-ம் தேதி சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த சிகிச்சைக்குப் பின்னர், டெல்லி நபருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 4 நாள்களில், அதாவது 14 -ம் தேதி முதல் அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டது. வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தாமாக உணவு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வர, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவர் நேற்று, தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி, வீடு திரும்பினார். அதாவது சிகிச்சை எடுத்துக்கொண்ட 12 நாளில் அவர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அவர் வீட்டில் 2 வாரங்களுக்குத் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமான முதல் நபர் இவரே. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவர் தனது பிளாஸ்மாவை தானமளிக்க விரும்பினால், அவரிடம் இருந்து 400 மில்லி பிளாஸ்மா எடுக்கலாம். அப்படி எடுக்கப்படும் பிளாஸ்மா மூலம் கொரோனா தொற்றில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டு நபர்களுக்கு சிகிச்சை வழங்கமுடியும்” என்கிறார்கள் மருத்துவர்கள். முதல் சிகிச்சையே வெற்றி அடைந்தது மருத்துவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.