பள்ளத்தில் விழுந்த யானையை காப்பாற்றிய ஆர்க்கிமிடிஸ் தத்துவம்.. மூணு மணி நேரத்துக்குள்ள கச்சிதமா வேலைய முடித்த அறிவியல்
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்காளம்: மேற்கு வங்கத்தில் பள்ளத்தில் விழுந்த யானை ஒன்றை அறிவியல் விதியை பயன்படுத்தி உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Elephant rescue using the Archimedes rule in West Bengal Elephant rescue using the Archimedes rule in West Bengal](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/elephant-rescue-using-the-archimedes-rule-in-west-bengal.jpg)
மேற்கு வங்காள மாநிலத்தின் மிதினாபுரம் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துள்ளது. பள்ளத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த அந்த யானை கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வந்துள்ளது.
அறிவியல் துணைக்கொண்டு மீட்பு:
யானை பிளிறும் சத்தத்தை கேட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்க விரைந்து வந்துள்ளனர். யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறை யானை மீட்க முடியாமல் தவித்து வந்தனர். நள்ளிரவு முதல் நடைபெற்று வந்த யானை மீட்கும் பணி அதிகாலை 4 மணியளவில் அறிவியல் துணைக்கொண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
அது என்னடா அறிவியல் துணை என பலர் நினைக்கலாம். அதாவது, பள்ளத்தில் விழுந்த இந்த யானையை ஆர்க்கிமிடிஸ் இயற்பியல் விதியைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்டிருப்பதாக ஐ.ஃஎப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்க்கிமிடிஸ் விதி (மிதத்தல் விதிகள்):
அ) மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.
ஆ) மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.
இ) மிதக்கும் பொருளின் அடர்த்தி, அது எந்தப் பாய்மத்தில் மிதக்கிறதோ அந்த பாய்மத்தின் அடர்த்தியினைவிட குறைவாக இருக்கும் - இதனை பயன்படுத்தியே பள்ளத்தில் விழுந்த யானையை மீட்டுள்ளனர்.
வெளியேறுவதற்கு ஏதுவாகச் சறுக்கலான பாதை:
முதலில் பள்ளத்திலுள்ள யானை எளிமையாக வெளியேறுவதற்கு ஏதுவாகச் சறுக்கலான ஒரு பாதை வளைவையும் ஏற்படுத்தியுள்ளனர். பள்ளத்தினுள் நீர் செலுத்த, செலுத்த யானை மேலே மிதக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மிதந்துக் கொண்டிருந்த அந்த யானை சறுக்கலாக அமைக்கப்பட்ட பாதை வளைவின் வழியாக ஏறி மேலே வந்துள்ளது.
இதனால் அந்த யானைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அதோடு வனத்துறை அதிகாரிகளுக்குப் பெரிய அளவிலான சிரமம் இல்லாமல் 3 மணி நேரத்தில் யானையை மீட்டுள்ளனர். யானை மீட்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)