‘நல்லவேளை காலையிலேயே பாத்துட்டோம்’!.. இது ‘டூரிஸ்ட்’ அதிகமாக குளிக்கிற இடம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் வீட்டுக்குள் முதலை நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அடுத்த அதிரப்பள்ளியில் பிரபலமான நீர்வீழ்ச்சி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்த அருவியில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடந்துள்ளன. இந்த அருவியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஷாபு என்பவரின் வீடு உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது வீட்டின் முன் வினோத சத்தம் கேட்டுள்ளது. உடனே அவரது மனைவி சாபியா கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் பெரிய முதலை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அலறியடித்து வீட்டுக்குள் ஓடி கணவரிடம் கூறினார். வேகமாக வெளியே வந்த ஷாபு, முதலையை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் அது பயப்படாமல் ஷாபுவை தாக்க பாய்ந்துள்ளது. இதனால் மிரண்டுபோன ஷாபு உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் வீட்டுக்குள் இருந்த சோபாவுக்குள் முதலை ஒளிந்து கொண்டது. பின்னர் தீப்பந்தம் கொளுத்தி காண்பித்ததும் முதலை வெளியே வந்தது.
இதனை அடுத்து கயிறு கட்டி முதலையை பிடித்த வனத்துறையினர், அருவியை ஒட்டியுள்ள ஆற்றில் கொண்டு விட்டனர். முதலை வந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிகம் குளிக்கும் இடம் என சொல்லப்படுகிறது. மேலும் ஷாபுவின் இரண்டரை வயது மகன் எப்போதும் வீட்டின் முன் விளையாடுவது வழக்கம். அதிர்ஷ்டவசமாக அதிகாலையிலேயே முதலையை கண்டுபிடித்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது என ஷாபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
