அரசியலையும் ஒரு கை பார்த்திடுவோம்...! 'கேரள அரசியலில்...' - 'புயலென' களம் இறங்கியுள்ள இளம்பெண்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட பெண்களுக்கு ஆண்களுக்கு சமமாக 50 சதவித இடத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
கேரளாவின் பிரதான கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் 20-ல் இருந்து 25 வயது பெண்களுக்கே 90% வாய்ப்பு கொடுத்துள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 8, 10, மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடக்கவிருக்கிறது. இதில் தலைநகரமான திருவனந்தபுரம் மாவட்டத்தில் 6,402 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3,329 பெண்களும் 3,073 ஆண்களும் ஆவர்கள்.
அதில் கிராம பஞ்சாயத்து வார்டுகளில் போட்டியிடும் 4,710 பேரில் பெண்கள் 2,464 பேரும், ஆண்கள் 2,246 பேரும் உள்ளனர். அதேபோல் ஒன்றிய வார்டுகளில் 523 பேரில் பெண்கள் 266 பேரும், ஆண்கள் 257 பேரும் போட்டியிடுகின்றனர். மாவட்ட பஞ்சாயத்தை பொறுத்தவரை 97 பேரில் 51 ஆண்கள், 46 பெண்கள் ஆவார்கள்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 556 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 278 பெண்களும் 278 ஆண்களும் ஆவார்கள். நகர சபையில் 516 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 274 பெண்களும் 242 ஆண்களும் என மொத்தத்தில் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெண்களில் பெரும்பாலானோர் முதல் முதலாக தேர்தல் களத்தில் நிற்கும் படித்த பட்டதாரி இளம் பெண்களாகும். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான SFI, இளைஞர் அமைப்பான DYFI, காங்கிரசின் மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அதேபோல் பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மற்றும் இளைஞரணியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பிரச்சாரத்துக்கு செல்லும்போது அவர்களுடன் இளைஞர்களும் அதிகமாக செல்கின்றனர். அந்த வேட்பாளர்களுடன் செல்ஃபி எடுப்பதுடன் அதை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். மேலும் அதை கிண்டல், கேலி பதிவாக நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், கேரளா தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் குறித்து இந்த மாதிரி சமூக வலைதளங்களில் போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.