'தேதியை குறிச்சு வச்சுக்கோங்க'... 'பட்டையை கிளப்பிய கேரள ஜோடி'... வைரலாகும் திருமண போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுகைப்படங்கள் என்பது நினைவுகளை நினைவூட்டும் மிகப் பெரிய பொக்கிஷம். தற்போது அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இதனால் புகைப்படம் எடுப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறி விட்டது. ஆனால் ஒரு 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் பள்ளி காலங்களில் எடுக்கப்பட்ட ஒரு க்ரூப் புகைப்படம்தான் அனைவரின் மனதிலும் எப்போதும் நிறைந்திருக்கும். அதை பார்த்து தங்களது பழைய நினைவுகளைப் பலரும் அசைபோட்டுக் கொள்வது உண்டு.

அந்த வகையில் திருமண புகைப்படங்கள் என்பது எப்போதும் எல்லோருக்கும் மறக்க முடியாத பல நினைவுகளைக் கொடுத்திருக்கும். 90களில் திருமண வீடுகளில் புகைப்படம் எடுக்கும் பழக்கம் என்பது மெதுவாக தளிர்க்க ஆரம்பித்தது. அதுவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பிரிண்ட் போட்டு வருவதைக் காணப் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். அருவி அருகே மணமக்கள் நிற்பது, இயற்கை அருகே திருமண ஜோடிகள் நிற்பது, தாஜ்மகால் அருகே நிற்பது போன்ற புகைப்படங்கள் அந்த காலத்தில் பிரபலமாக இருந்தது.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் திருமணம் நடக்கும் நாளன்று போட்டோ ஷூட் நடத்துவதைத் தாண்டி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவுடன் எங்களது திருமண நாளை குறித்துக் கொள்ளுங்கள் என்று போட்டோ மற்றும் வீடியோகள் எடுத்து நண்பர்களுக்குப் பகிரப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதில் பலரும் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் செய்கிறது.
இதுபோன்ற வித்தியாசமான போட்டோ ஷூட்கள் கேரளாவில் மிகவும் பிரபலம். சில மாதங்களுக்கு முன்பு சேற்றில் மணமக்கள் இருப்பதைப் போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதேபோன்று சமீபத்தில் கேரளாவின் வயநாடு பகுதியில் தம்பதியர் நடத்திய போட்டோ ஷூட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது மிகவும் ஆபாசமாக இருந்ததாகப் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்று வித்தியாசமாகவும், பலரது பாராட்டையும் பெற்று அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ராபின் என்ற இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நீத்து ஜாய் என்ற இளம் பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ராபின் துபாயில் வேலை செய்து வரும் நிலையில், நீத்து நர்சாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் நவம்பர் 23ம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான போட்டோ ஷூட் என்பது சமீபத்தில் நடைபெற்றதது. இதில் மணமக்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர் போல உடையணிந்து, ஆட்டோ ஸ்டாண்டில் நிற்பது போலவும் அங்கிருக்கும் மற்ற ஓட்டுநர்களிடம் பேசிக் கொண்டு இருப்பது போலவும் போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டோ ஷூடானது மற்ற போட்டோ ஷூட்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் இதன் புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களை ஜிபின் ஜாய் என்ற புகைப்பட கலைஞர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
