'அறிகுறிகள்' எதுவுமின்றி '19வது முறையும்' பெண்ணுக்கு பாசிட்டிவ்... '42 நாட்கள்' சிகிச்சைக்குப் பின்... 'கவலையில்' மருத்துவ குழு...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 22, 2020 12:49 AM

கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 42 நாட்களாக மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Corona Kerala Woman Tests Positive For 19th Time After 42 Days

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கும் வேளையில், நாட்டிலேயே முதல்முதலாக பாதிப்பு கண்டறியப்பட்ட கேரளாவில் இதுவரை 408 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம் அங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62 வயது பெண் ஒருவர் கடந்த 42 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தாலி சென்று வந்தவர்களிடம் இருந்து அந்த பெண்ணுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து  கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அந்த பெண் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பின் குணமாகியுள்ளார். தற்போது கொரோனா அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 19 முறை நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும் முடிவு பாசிட்டிவாகவே இருந்து வருகிறது. கேரள மருத்துவர்கள் அந்தப் பெண்ணை முற்றிலுமாக குணப்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அவர் மருத்துவமனையிலே வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.