குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தீவிர சிகிச்சையில் இருந்த கேப்டன் வருண் காலமானார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுன்னூரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய ஒரே ஆளாக இருந்தவர் கேப்டன் வருண் சிங். 80% தீக்காயங்கள் உடன் பெங்களுரூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங் தற்போது காலமானார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதில் குரூப் கேப்டன் வருண் சிங் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். இவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உத்திரபிரதேச மாநிலத்தின் தேவரியா மாவட்டத்தை சேர்ந்தவர் கேப்டன் வருண் சிங். இவரது தந்தை கிருஷ்ண பிரசாத் இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருண் சிங் ஒரு போர் விமானத்தை பயிற்சி ஓட்டத்திற்காக ஈடுபடுத்தி இருந்தார். பரிசோதனை அடிப்படையில் அந்த போர் விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது விமானி அமரும் அறையில் காற்றழுத்த கட்டுப்பாடு செயலிழந்தது. விமானம் மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இந்த இக்கட்டான சிக்கலை வருண் சிங் எதிர்கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான, உடல் மற்றும் மன அழுத்தம் மிகுந்த சூழலிலும் துணிச்சலோடு செயல்பட்டு விமானத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதன்மூலம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் சேதமின்றி காப்பற்றப்பட்டது. வருண் சிங்கின் இத்தகைய துணிச்சலை பாராட்டும் வகையில் 2021 வருட சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவரால் ஷௌர்ய சக்ரா பட்டம் வழங்கப்பட்டது.
இத்தகைய துணிச்சல் மிகுந்த வீரர் இன்று சிகிச்சை பலனின்றி பெங்களுரூ மருத்துவமனையில் காலமானார்.