‘அப்பா பணியாற்றிய அதே பிரிவு’.. முதல் முப்படை தலைமை தளபதி.. மறைந்த பிபின் ராவத்தின் பின்னணி என்ன..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் 1958 ஆண்டு மார்ச் 16-ம் நாள் பிபின் ராவத் பிறந்தார். இவரது தந்தை லட்சுமண் சிங் ராவத் ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்தவர். டேராடூன், சிம்லா ஆகிய நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூனில் உள்ள ராணுவ அகாடமியில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார்.
இதனை அடுத்து குன்னூர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சிக் கல்லூரியில் பாதுகாப்பு தொடர்பான கல்வியியலில் எம்பில் பட்டம் பெற்றார். மீரட் சரண் சிங் பல்கலைகழகத்தில் ராணுவ ஊடக தந்திரம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது தந்தை பணியாற்றிய கூர்கா ரைபிள் பிரிவில் ஐந்தாவது படையில் பிபின் ராவத் சேர்ந்தார். இதனை அடுத்து ஜம்மு-காஷ்மீரின் ஊரில் ஒரு படையணிக்கு தலைவராக இருந்தார். 1987-ம் ஆண்டு சீனாவுடன் சண்டை ஏற்பட்டபோது சீனப்படையை எதிர்கொள்ள பிபின் ராவத் தலைமையிலான இந்திய படைப்பிரிவு அனுப்பப்பட்டது. 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகள் ராணுவ தளபதியாக பணியாற்றினார்.
இதனை அடுத்து முதல் முறையாக உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு 2020-ம் ஆண்டு பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர் தளபதியாக பதவி வகித்த காலத்தில் பாதுகாப்புத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரஷ்யா, வியட்நாம் அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று பிபின் ராவத் உயிரிழந்தது நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
