"நம் ராணுவப் படைகளைக் கண்டு பெருமைப்படுகிறேன்..."- உருக்கமான பிபின் ராவத்-ன் கடைசி உரை
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மறைந்த முப்படைத் தளபதி, பிபின் ராவத், பொது மக்களுக்காக கடைசியாக பேசிய வீடியோ செய்தியை ராணுவத் தரப்பு தற்போது வெளியிட்டு இருக்கிறது.
கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி, இந்தியா - பாகிஸ்தார் போர் நடந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றன. இதையொட்டித் தான் பிபின் ராவத், காணொலி மூலம் பேசிய செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. வீடியோவில் பிபின் ராவத், ‘நமது ராணுவத்தை நினைத்து அனைவரும் பெருமை கொள்கிறோம். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரில் வெற்றி பெற்றதை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.
விஜய் பர்வ் தினத்தன்று நம் நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தீரமிக்க வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் விஜய் பர்வ்வின் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்’ என்று கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 8-ம் தேதி தமிழகத்தின் குன்னூர் பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்ட்டர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் பிபின் ராவத். முப்படைத் தளபதியான அவருக்கு நாடு முழுவதில் இருந்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
விமான விபத்தில் அவருடன் பயணம் செய்த அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்தில் குழு கேப்டன் விமானி வருண் சிங் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது அவர் பெங்களூருவில் இருக்கும் விமானப் படை கமாண்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர், டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டனர். பெற்றோர் இருவருக்கும் அவர்களது மகள்களான கிருத்திகா மற்றும் தாரினி ஆகியோர் இறுதிச் சடங்கு செய்தனர். இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்பாராத விதமாக நடந்த விபத்து குறித்து விசாரிக்க ‘டிரை சர்வீஸ்’ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது மத்திய அரசு. இந்த விசாரணைக்கு ஏர் மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமை தாங்குவார்.
இப்படியான சூழலில் அவர் இறப்பது ஒரு சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தியைச் தான் ராணுவம் தற்போது வெளியிட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறது.