எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்... பெண்களிடம் அத்துமீறினால் அவ்ளோதான்.. பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் காலணி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.

இந்தியாவையே உலுக்கிய சம்பவம் நிர்பயா கொலை வழக்கு. அதில் இருந்து பெண்களை பாதுகாக்க ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு வகைகளில் புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேபோல, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவ, மாணவியர்களை தொடர்ந்து ஊக்குவித்தும் வருகின்றன அரசுகள். சில தனியார் நல அமைப்புகளும் இந்த பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பெண்கள் பாதுகாப்புக்கான பிரத்யேக காலணிகளை உருவாக்கி இருக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி விஜயலட்சுமி. இவர் மின் இணைப்பு கொண்ட காலணி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இதில் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், யாரேனும் தொந்தரவு கொடுக்க முயன்றால் அவர்களை எட்டி மிதிக்கலாம் எனவும் அப்போது அவர்களது உடலில் சில வினாடிகளுக்கு மின்சாரம் பாயும் எனவும் கூறுகிறார் விஜயலக்ஷ்மி.
தாக்க வரும் நபர் மீது மின்சாரம் தாக்குவதால் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ளலாம் எனவும் அதே நேரத்தில், காலணியில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார் மாணவி விஜயலக்ஷ்மி.
ஜிபிஎஸ் கருவி மூலமாக ஆபத்தில் உள்ள பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் செல்லும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்பை விஜயலக்ஷ்மி பயின்று வரும் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருமே பாராட்டி இருக்கின்றனர். அதனுடன் இந்த கண்டுபிடிப்பை கோவாவில் நடைபெற்ற சர்வதேச புதிய கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருக்கிறார் இந்த மாணவி. இந்த பாதுகாப்பு காலணி பரிசையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மாணவி கண்டுபிடித்துள்ள இந்த காலணி பலரையும் ஈர்த்துள்ள நிலையில், அந்த மாணவியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
