'மகள் பிடிஎஸ் இரண்டாம் ஆண்டு'... 'அதே கல்லூரியில் அப்பா எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு'... 64 வயதில் அசத்திய நபர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாதிப்பதற்கும், நினைத்ததை அடைவதற்கும் வயது என்பது எப்போதும் தடை இல்லை என நிரூபித்துள்ளார் 64 வயது நபர் ஒருவர்.
ஒடிசாவின் பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான். இவருக்குச் சிறு வயது முதலே மருத்துவப் படிப்பில் ஆர்வம் இருந்துள்ளது. ஒருமுறை மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதித் தோற்றதால் வாழ்க்கை திசை மாறி அவருக்கு வங்கிப்பணி கிடைத்தது. பணியால் அவரின் மருத்துவ கனவு வெறும் கனவாகவே இருந்ததுள்ளது.
இந்நிலையில் தனது வங்கி பணியிலிருந்து கடந்த 2016ல் அவர் ஓய்வு பெற்ற நிலையில், மீண்டும் தனது மருத்துவ கனவை நிஜமாக்க அவர் திட்டமிட்டார். இதற்காகக் கடந்த 2019ம் ஆண்டு நீட் தேர்வுக்காகத் தினசரி 10 முதல் 12 மணி நேரம் படித்தார். நீட் தேர்வுக்கு வயது வரம்பில்லை என்ற தளர்வு இவருக்கு கை கொடுத்தது. நீட் தேர்வில் வென்று நாட்டிலேயே தனித்துவமான வகையில் எம்பிபிஎஸ் படிப்பிலும் சேர்ந்துள்ளார்.
தனது தந்தைக்குச் செய்த அல்சர் அறுவை சிகிச்சை காரணமாக அவர் கூடுதலாக 30 ஆண்டுகள் வாழ்ந்ததாக நினைவுகூரும் ஜெய்கிஷோர், அந்த தருணத்தில் மருத்துவராக முடிவுசெய்து அதற்காக உழைத்ததாகக் கூறுகிறார். இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஜெய்கிஷோர் சேர்ந்துள்ள அதே கல்லூரியில் தான் அவரின் மகள் 2ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார். எண்ணம் போல வாழ்க்கை என்ற கூற்றை நிஜமாக்கியுள்ளார் ஜெய்கிஷோர் பிரதான்.