'டாக்டராகும் கனவில் தீ வைக்கிறது நீட்' - சூர்யாவின் பரபரப்பு அறிக்கை. 'இதுல லாஜிக்கே இல்லயே?' - காயத்ரி ராகுராமின் கிடுக்குப்பிடி கேள்வி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் சூர்யா நீட் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வு தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலம் உள்ளது. கொரோனா போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டி நிர்பந்திக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.
சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசு, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிக்கிறார்கள். நீட் போன்றதொரு மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளையும் உயிர்களையும் பறிக்கிறது.
மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும். அன்பான குடும்பம், நல்ல உறவு, நண்பர்கள் என இந்த அற்புத வாழ்வுக்கு முன்னால், தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம். மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களின் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டதுபோல, நவீன துரோணர்கள் குழந்தைகள் தேர்வெழுதி தங்களது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. நாளையும் நடக்கும். சாதரண குடும்ப பிள்ளைகளின் டாக்டராகும் கனவில் தீ வைக்கிறது நீட் தேர்வு” என்று குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நடன நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், “முதல்நாள் முதல் ஷோ தியேட்டரில் கொண்டாடும் விதமாக வைக்கப்படும் பேனர் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்போமா? இதில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லையே. தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒவ்வொருநாளும் மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட ஒருவகையில் தினமும் தேர்வு எழுதுவதைப் போலத்தான்” என்று கூறியுள்ளார்.