ஒரே 'மேட்ச்'ல ரோஹித், கோலி விக்கெட்... "மாஸ்டர் பிளான் போட்டு அவங்கள தூக்குனேன்..." முதல் முறையாக மனம் திறந்த 'அமீர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முகமது அமீர் திடீரென தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் தொல்லை தாங்க முடியாமல் தான் ஓய்வு முடிவை எடுத்திருந்ததாக 28 வயதேயான அமீர் குறிப்பிட்டிருந்தார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் அணி கண்ட சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அமீர், கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற மிக முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணியுடன் நடைபெற்ற இறுதி போட்டியில் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை அமீர் வீழ்த்தி இந்திய அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். ரோஹித், கோலி ஆகியோரை எப்படி திட்டமிட்டு வீழ்த்தினேன் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மலுடன் நடந்த வீடியோ உரையாடல் ஒன்றில் அமீர் தெரிவித்துள்ளார்.
'ரோஹித் இன் ஸ்விங் பந்துகளில் சற்று தடுமாறுவார் என்பது எனக்குத் தெரியும். இதனால் முதல் இரண்டு பந்துகளை இன் ஸ்விங் செய்யாமல் சற்று வெளியே வீசினேன். நான் வெளியே வீசுவதால் எனக்கு பந்து இன் ஸ்விங் செய்யத் தெரியாது என ரோஹித்தை நம்ப வைத்து மூன்றாவது பால் இன் ஸ்விங் செய்ததும் ரோஹித் அடிக்க முடியாமல் அவுட்டானார்.
அதே போல கோலி பேட்டிங் செய்ய வந்த போது இன் ஸ்விங் பந்துகளை வீசினேன். ஆனால், அதனை அவர் மிக எளிதாக எதிர்கொண்டார். அதன் பிறகு, பந்துகளை அவர் அருகே வீச வேண்டாம் என முடிவு செய்து அவரிடம் சற்று தள்ளியே வீசினேன். அந்த பந்துகள் ஸ்லிப் அருகே சென்று கொண்டிருந்தது. அப்படி அடிக்க முற்பட்டு தான் கோலி அவுட்டானார். அவரின் கேட்சை மிகவும் அற்புதமாக பிடித்த ஷதாப்பிற்கு தான் நன்றிகளை சொல்ல வேண்டும்' என அமீர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.