'பெருங்குடி TO கலிஃபோர்னியா'... 'மச்சி, அங்க வேல பாத்த 500 பேர் இப்போ கோடீஸ்வரங்கடா'... ஐடி இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்த சென்னை நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்நிறுவனத்தின் பங்குதாரர்களான 500 ஊழியர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக மாறி பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளார்கள்.
சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு கலிஃபோர்னியாவில் தற்போது செயல்பட்டு வரும் நிறுவனம் தான் FRESHWORKS. இது சென்னையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கிரிஷ் மாத்ருபூதம் மற்றும் ஷான் கிருஷ்ணசாமி ஆகியோரால் தொடங்கப்பட்டது. சென்னையில் இந்த நிறுவனம் சில ஆண்டுகள் இயங்கி வந்த நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தையில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கோடு கலிஃபோர்னியாவில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார் கிரிஷ் மாத்ருபூதம்.
FRESHDESK என்ற பெயரோடு இருந்த அந்த நிறுவனம் FRESHWORKS எனப் பெயர் மாற்றப்பட்டு தனது புதிய இன்னிங்ஸை ஆரம்பித்தார்கள். இந்நிலையில் தங்களது விடா முயற்சியால் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் புதன்கிழமை பட்டியலிடப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது FRESHWORKS.
பங்கு ஒன்றின் விலை 2 ஆயிரத்து 600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 30 சதவிகிதம் அதிகரித்து 3 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களான 500 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இதில், 70 பேர் 30 வயதிற்குப்பட்டவர்கள்.
FRESHWORKS-ல் பணியாற்றும் 75 சதவீதம் பேர், அந்நிறுவனத்தின பங்குதாரர்களாக இருப்பது தான் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களில், நாஸ்டாக்கில் பட்டியலிடப்படும் முதல் நிறுவனம் FRESHWORKS என்பது கூடுதல் சிறப்பாகும்.
FRESHWORKS- நிறுவனத்தினை ஆரம்பித்து சென்னையிலிருந்து அமெரிக்கா சென்று விட்டாலும் கிரிஷ் மாத்ருபூதம் எப்போதுமே ரஜினியின் தீவிர ரசிகராகவே இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியை தனது மானசீக குருவாகவே கருதும் கிரிஷ் மாத்ருபூதம், அமெரிக்கப் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தைப் பட்டியலிடச் செய்யும் திட்டத்துக்கு ‘சூப்பர் ஸ்டார் திட்டம்’ எனப் பெயரிட்டு, தான் சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பதைத் தாண்டி அவரது பக்தர் என்ற நிலைக்குச் சென்று விட்டார்.
கபாலி, கோச்சடையான், லிங்கா என நடிகர் ரஜினியின் எந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் சென்னையில் உள்ள திரையரங்குகளை மொத்தமாகத் தனது ஊழியர்களுக்காக முன் பதிவு செய்து அசத்துவது கிரிஷ் மாத்ருபூதத்தின் வழக்கம்.
அவருக்கு இருக்கும் பெரும் கனவுகளில் ஒன்று, தனது நிறுவனத்தை ரஜினி வந்து பார்வையிட வேண்டும் என்பது தான். கடின உழைப்பும், தெளிவான சிந்தனையும் இருந்தால் நீங்கள் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு கிரிஷ் மாத்ருபூ ஒரு பெரிய உதாரணம்.
Check out @mobhat & @mrgirish storming the stage, circa 2017! Talk about VC value add! 😂 Clearly, we'll do anything to partner with the best founders in the world! Congrats @FreshworksInc on today's #IPO! pic.twitter.com/FRIJHyaeyF
— G V Ravi Shankar (@gvravishankar) September 22, 2021