புத்தாண்டு முதல் ஏடிஎம்-ல் காசு எடுக்கக் கட்டணம்: எவ்வளவு உயருகிறது? எத்தனை முறை இலவசம்..?
முகப்பு > செய்திகள் > வணிகம்அடுத்த மாதத்தில் இருந்து ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் ஒவ்வொரு வங்கியும், தங்கள் வாடிக்கையாளர்கள் தாங்கள் நிர்மாணித்துள்ள ஏடிஎம்- களில் பணம் எடுத்தலுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை வைத்துள்ளது. அந்த வரம்பிற்குள் பணம் எடுத்தால் கட்டணம் எதுவும் இல்லை என்றும், அதை மீறி பணம் எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் என்றும் நடைமுறையை வைத்துள்ளது.
மேலும் வங்கிகள், மற்ற நிறுவன வங்கிகள் மூலம் பணம் எடுத்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் அறிவித்து, அதுவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் அடுத்த மாதம் முதல் ஏடிஎம் பணம் எடுத்தல் மேலும் உயர்வு காண உள்ளது. இது குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அரசு அங்கீகரித்துள்ள இந்த விலையேற்றம் குறித்து வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தி வருகின்றன.
இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிகளின் குறிப்பிட்ட அளவை தாண்டிய பின்னரும் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் 21 ரூபாய் கொடுக்கும்படி இருக்கும். தற்போதைய சூழலில் அது 20 ரூபாய் என்கிற அளவில் தான் இந்த கட்டண வசூல் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்- களில் இருந்து ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆர்பிஐ விதிகள்படி, நகரங்களில் வாழும் ஒரு வாடிக்கையாளர் மற்ற நிறுவன வங்களின் ஏடிஎம்- களில் இருந்து ஒரு மாதத்துக்கு 3 முறை இலவசமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று விதிமுறை வகுத்துள்ளது.
வாடிக்கையாளர் மெட்ரோ நகரங்களில் இல்லாத பட்சத்தில், மற்ற நிறுவன வங்கிகளிலும் 5 முறை இலவசப் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த அறிவிப்பு இப்போது தெரிவிக்கப்பட்டது இல்லை. கடந்த ஜூன் மாதமே ஆர்பிஐ இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டது. அதன்படி இந்த அறிவிப்புகள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது.