பெஸ்ட் கம்பனி-னு ஜோ பைடன் கொடுத்த லிஸ்ட்.. அப்செட்டில் எலான் மஸ்க் போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அந்நாட்டின் முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார் ஆகியவற்றை புகழ்ந்து பேசி இருக்கிறார். இந்த நிறுவனங்கள் அதிக முதலீட்டையும் வேலை வாய்ப்பையும் உருவாக்கி இருப்பதாக பைடன் தெரிவித்து இருக்கிறார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் எலான் மஸ்க் ட்வீட் செய்திருப்பது வைரலாகி வருகிறது.
ஜோ பைடன்
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடி அதிபர் பதவிக்கு வந்தவர் ஜோ பைடன். இவர் நேற்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்," ஃபோர்டு நிறுவனம் அமெரிக்கா முழுவதிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. மேலும், 11,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வரலாற்றிலேயே முதல்முறையாக 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு முதலீடு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 4000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவில்," எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் 50,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. மேலும், ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து முதலீடு செய்திருக்கும் தொகையை விட அதிகமாக டெஸ்லா முதலீடு செய்து இருக்கிறது" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தனது ட்வீட் பதிவின் இறுதியில்," ஜோ பைடனின் டிவிட்டர் கணக்கை கையாளும் நபருக்காக இந்தத் தகவலை வழங்கியுள்ளேன்" எனவும் மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார்.
புறக்கணிப்பு
அமெரிக்காவின் முக்கிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவை ஜோ பைடன் புறக்கணிப்பதாக கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் எலான் மஸ்க். அதனைத் தொடர்ந்து டெஸ்லாவின் பங்களிப்பு பற்றி பாராட்டி ஜோ பைடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இந்நிலையில், மீண்டும் அமெரிக்காவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களின் பட்டியலில் டெஸ்லாவை பைடன் புறக்கணித்ததும் அதனை தொடர்ந்து எலான் மஸ்க் போட்ட ட்வீட்டும் தற்போது வைரலாகி வருகிறது.