உலகப் பணக்காரர்களுள் ஒருவரா இருந்திட்டு இப்டி கடைசி வீட்டையும் வித்துட்டீங்களே சார்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலக அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியல் போட்டால் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவார் எலான் மஸ்க். ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலக்டிரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றின் சிஇஓ- வாக இருக்கும் மஸ்க்கிற்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகம்.

வெறுமனே பணம் சம்பாதிப்பது, அதை அனுபவிப்பது என்று இருந்து விடாமல் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, விண்வெளி தொழில்நுட்பத்தில் சாதனைகள் புரிவது என்று துடிப்புடன் செயல்பட்டு வருபவர் மஸ்க். குறிப்பாக மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதை தனது வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளார் மஸ்க். வெறும் கனவு காணாமல் அதற்காக அயராது உழைத்து வருகிறார். இதனால் அவரின் புகழ் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டு வருகிறது.
குறிப்பாக தனக்குச் சொந்தமாக உள்ள அனைத்து சொத்துகளையும் விற்று, மார்ஸில் மனிதர்களை குடியமர்த்துவதற்குப் பயன்படுத்தப் போவதாக அறிவித்து, அதை விற்கவும் நடவடிக்கை எடுத்து வந்தார். அப்படி அவரிடமிருந்த ஒவ்வொரு சொத்துக்களும் விற்று விட்டன.
கடைசியாக மிச்சம் இருந்தது அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய பங்களா வீடு. இதை மட்டும் அவர் விற்காமல் இத்தனை நாள் தனதாகவே வைத்திருந்தார். இதுவும் தற்போது 30 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போயுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த பங்களா வீட்டை மஸ்க், 23 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது கடைசி சொந்த வீட்டையும் விற்று விட்டதால் எலான் மஸ்கிற்கு, ‘மார்ஸ் மிஷனுக்கு’ அதிகமாக நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றியே தீருவேன் என்று சொல்லி வருகிறார் மஸ்க்.
சில நாட்களுக்கு முன்னர் உலகின் மக்கள் தொகை குறித்துப் பேசிய மஸ்க், ‘ ‘நம் மனித நாகரிகத்துக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிறப்பு விகிதம் என்று கருதுகிறேன். நம் உலகில் பிறப்பு விகிதமானது எதிர்பாராத அளவுக்கு மிகவும் குறைவாக சரிந்து வருகிறது. உலகில் போதுமான அளவுக்கு மனிதர்கள் இல்லை என்பது நம் மொத்த நாகரிகத்துக்கே இருக்கும் பிரச்சனையாகவே நான் கருதுகிறேன்.
உலகில் பலரும், குறிப்பாக பல அறிவாளிகளும் கூட அதிக மக்கள் தொகையால் நாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறார்கள். அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால், உண்மை என்பது அதற்கு நேர்மாறாகத் தான் உள்ளது. வெறுமனே தற்போது இருக்கும் மக்கள் தொகையை மட்டும் வைத்து இப்படி நினைக்கிறார்கள்.
வரும் காலங்களில் மக்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நம் நாகரிகத்துக்கே மிகப் பெரும் ஆபத்துக் காத்திருக்கிறது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
