‘கார் ஷெட்டில் தொடங்கிய சகாப்தம்’!.. அமேசான் ‘CEO’ பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்.. அடுத்த CEO யார் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > வணிகம்அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தனது வீட்டின் கார் ஷெட்டில் உருவாக்கியதுதான் அமேசான் (Amazon). தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் புத்தகங்களை பதிப்பாளர்களிடமிருந்து வாங்கி அவற்றை தபால் அலுவலகம் மூலம் வீடுகளுக்கு டெலிவரி செய்து வந்தார். பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இன்று பெரும்பாலான நாடுகளில் செயல்படும் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் திகழ்ந்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருள் தயாரிப்பிலும் அமேசான் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேலும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொண்டு நடவடிக்கைகளிலும் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1.7 லட்சம் கோடி டாலர். கடந்த ஆண்டு மட்டுமே இந்நிறுவனத்தின் வருமானம் 38,600 கோடி டாலர். இதனால் உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென அமேசான் தலைமை செயல் அதிகாரி (CEO) பதவியை இன்றுடன் (05.07.2021) ராஜினாமா செய்ய உள்ளதாக ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு இதே நாளில்தான் அமேசான் நிறுவனத்தை ஜெஃப் பெசோஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி (Andy Jassy) என்பவர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னதாக அமேசான் வெப் சர்வீஸ் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
