இந்த ஊழியர்களுக்கு எல்லாம் அடிக்கப்போகுது ‘செம’ ஜாக்பாட்.. 6 வருசத்துல இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம்? ஆய்வில் தகவல்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்ப்பரேட் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அயோன் இந்தியா (Aon India) என்ற ஆய்வு நிறுவனம், 26-வது வருடாந்திர சம்பள உயர்வு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-ம் ஆண்டில் சம்பள உயர்வானது 9.9 சதவீதம் ஆக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 9.3 சதவீதமாக இருந்தது.
இதில் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில், 33 சதவீத நிறுவனங்கள் 2022-ல் 10 சதவீதத்துக்கும் அதிகமான சம்பள உயர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு 5 சதவீதம் சம்பள உயர்வு அதிகரித்து காணப்படும் என கூறப்படுகிறது. இந்த சம்பள உயர்வானது கொரோனா முதல் அலையில் 6.1 சதவீதமாக குறைந்து. பின்னர் 2021-ல் கொரோனா காலத்திற்கு முந்தைய சம்பள உயர்வு அளவான 9.3 சதவீத நிலைக்குத் திரும்பியது.
மேலும், கொரோனா 2-வது மற்றும் 3-வது அலைகள் கடுமையாக இருந்தபோதிலும், பிரிக்ஸ் (BRICS - Brazil, Russia, India, China, and South Africa) கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் அதிக சம்பள உயர்வு கிடைக்கப் பெறலாம் என்று இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதாவது பிரேசிலில் 5 சதவீதமும், ரஷ்யாவில் 6.1 சதவீதமும், சீனாவில் 6 சதவீதமும் சம்பள அதிகரிப்பும் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
ஆனால் இந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் 9.9 சதவீத சம்பள உயர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சம்பள உயர்வு 3.6 சதவீதமாகவும், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் 3 சதவீத சம்பள உயர்வையும் எதிர்பார்க்கலாம். ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் உள்ள கார்ப்பரேட் துறைகள் முறையே 2.9 சதவீதம் மற்றும் 4 சதவீதம் சம்பள உயர்வை தங்களது ஊழியர்களுக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இ-காமர்ஸ் மற்றும் வென்சர் கேப்பிட்டல் (12.4 சதவீதம்), உயர் தொழில்நுட்பம்/ ஐடி துறை (11.6 சதவீதம்), தொழில்முறை சேவைகள் (10.9 சதவீதம்), ஐடி துறை சார்ந்த துறைகள் (10.7 சதவீதம்), பொழுதுபோக்கு/கேமிங் (10.2 சதவீதம்) மற்றும் லைஃப் சயின்ஸ் (9.6 சதவீதம்) துறைகள் மிக உயர்ந்த ஊதிய உயர்வுகளைக் கொண்ட சில துறைகளில் அடங்கும். அதேவேளையில், உலோகங்கள்/சுரங்கம் (8.3 சதவீதம்), QSR (ஃபாஸ்ட் புட் உணவகங்கள்) /உணவகங்கள் (8.5 சதவீதம்), மற்றும் சிமெண்ட் (8.6 சதவீதம்) ஆகிய துறைகள் இந்த ஆண்டு மிகக் குறைந்த சம்பள உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா போன்ற சவாலான காலகட்டத்திற்கு மத்தியில், ஊழியர்களை ராஜினமா செய்யாமல் தக்க வைத்துக்கொள்ள, நிறுவனங்கள் அதிகளவு சம்பள உயர்வினை செய்து வருகின்றன என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.