'தொடர்ந்து நல்ல செய்தி சொல்லும் தங்க விலை'... 'இப்படி விலை குறைய என்ன காரணம்'?... இன்றைய நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4,100 ரூபாயாக இருந்த ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 5,900 ருபாய் வரை தொட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உலக அளவில் பங்குச் சந்தைகள் உட்பட முதலீடுகள் மோசமான வருமானத்தைக் கொடுத்தால் தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்புவார்கள். ஆனால் தற்போது உலக அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. அமெரிக்காவின் நாஸ்டாக், எஸ் & பி 500, பிரான்சின் சிஏசி, லண்டனின் எஃப்டிஎஸ்இ, ஜெர்மனியின் டிஏஎக்ஸ், இந்தியாவின் சென்செக்ஸ் என பல நாட்டுக் குறியீடுகளும் கடந்த ஆறு மாதமாக நல்ல ஏற்றத்தில் இருக்கின்றன.
எனவே முதலீட்டாளர்களின் கவனம் பங்குச் சந்தைகளில் குவிந்திருப்பதால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துவிட்டன. எனவே தங்கத்தின் விலை சரிந்து கொண்டிருக்கிறது. மேலும் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4,181-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33,448-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.36,576-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்து 70 ரூபாய்க்கும் கீழே சென்றுள்ளது.
1 கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.69.80க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.69,800 ஆக உள்ளது. இதனிடையே இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் தங்கம் விலை அதிகரிக்கும்.
இதுவே இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றால் தங்கம் விலை குறையும். கடந்த நவம்பர் 2020-ல் 74.70 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 72.8 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது (அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு என்றும் கூறலாம்) ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது.