'தங்கம் வாங்குனா இல்ல, நினைக்கவே காசு கொடுக்கணும் போல'... ஜெட் வேகத்தில் செல்லும் விலை !
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தொழில்துறை கடுமையான தேக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

பலரும் தங்களின் பாதுகாப்பான முதலீட்டிற்காகத் தங்கத்திலேயே முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 உயர்ந்து ரூ.4785 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.544 உயர்ந்து ரூ.38280க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 40192 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 5.60 ரூபாய் உயர்ந்து 65.70ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதற்கிடையே தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
