எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ‘LIKE’.. 16 மணிநேரத்தில் ‘சென்னை’ நிறுவனத்துக்கு அடித்த ஜாக்பாட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்எலான் மஸ்க் ட்விட்டரில் போட்ட ஒரே ஒரு Like-ஆல் சென்னை நிறுவனத்துக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடாக கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace) நிறுவனம், ட்ரோன் மூலம் தண்ணீரை தெளித்து சோலார் பேனல்கள், தொழிற்சாலைகளில் உள்ள உயர்ந்த கோபுரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இதேபோல் 1 லட்சத்து 22 ஆயிரம் சோலார் பேனல்கள் தங்களது ட்ரோன்கள் மூலம் பராமரிக்கப்படவுள்ளதாக, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனர் அக்னீஸ்வர் ஜெயப்பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். அதில், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்கை (Elon Musk) டேக் செய்துள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு எலான் மஸ்க் ‘Like’ செய்யவே, அது லட்சக்கணக்கானோரை சென்றடைந்து வைரலானது. இதனை அடுத்து லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மீது 1 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. தனது ட்வீட்டை எலான் மஸ்க் Like செய்த 16 மணிநேரத்தில் இந்த முதலீடு கிடைத்துள்ளதாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனர் அக்னீஸ்வர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
News Credits: BusinessLine