ஐயா...! 'என் ஆட்டை காணோம்யா...' 'சிசிடிவியில் கிடைச்ச சின்ன க்ளூ...' - விசாரணையில் கிடைத்த அதிர வைக்கும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 30-ஆம் தேதி சென்னை கொரட்டூர் போத்தியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் இந்திரா என்பவரின் வீட்டின் முன் கட்டியிருந்த ஆடுகள் அதிகாலை நேரத்தில் காணாமல் போயுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்திரா, காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில், போலீசார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, சொகுசு காரில் வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடுகளைத் திருடியது தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல், கொரட்டூர் பாடி ஜகதாம்பிகை நகரைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் கோழி இறைச்சிக் கடையிலிருந்து 12 நாட்டுக்கோழிகளைக் கூண்டோடு காரில் வந்த ஆணும், பெண்ணும் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், இந்த இரண்டு சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு நம்பரை போலீசார் ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்டது ஒரே கும்பல் எனத் தெரிய வந்தது. .
அதன்பின் வண்டியின் பதிவு எண்ணைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் ஆடுகள், கோழிகளைத் திருடியது கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சுந்தர் நகரைச் சேர்ந்த அஷ்ரப் (38), அவரின் மனைவி லட்சுமி (35) எனத் தெரியவந்தது.
அதையடுத்து தம்பதிகள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டுக்குப் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கூறிய போலீசார், 'அடுத்தடுத்து நடைபெற்ற இந்த திருட்டுகள் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், காரின் பதிவு எண்ணைப் பார்த்ததும் சந்தேகத்தின் பேரில் காரை ஓட்டி வந்த அஷ்ரப், அவரின் மனைவி லட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், இந்த தம்பதியினருக்கு 6 மாதக் குழந்தை உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் வருமானம் இல்லாததால் இருவரும் ஆடுகள், கோழிகளைத் திருடி வந்திருக்கின்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
