ரெடியாகிக்கோங்க... சென்னை, கோவை உட்பட 35 சிட்டியில் 8000 பேருக்கு மேல் வேலைக்கு எடுக்க போறோம்.. பிரபல நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்அமேசான் நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் 8000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், செயற்கை நுண்ணறிவு, ஓடிடி தளம் உட்பட பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் 8 ஆயிரம் பேருக்கு மேல் புதிதாக வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவர் தீப்தி வர்மா, ‘இந்தியாவின் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஹைதராபாத், குர்கான், மும்பை, கொல்கத்தா, நொய்டா, அமிர்தசரஸ், அகமதாபாத், போபால், ஜெய்ப்பூர், கானபூர், லூதியானா, புனே, சூரத் உள்ளிட்ட 35 நகரங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்க உள்ளோம். தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்தது. அதில் தற்போது 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக தீப்தி வர்மா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அமேசான் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் 16-ம் தேதி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு வழிகாட்டு முகாம் நடத்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. காணொலி மூலம் நடக்கும் இந்த முகாமில், அமேசான் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.