கார் வாங்க ப்ளான் பண்றீங்களா..? சீக்கிரமே விலை உயர்த்தப் போகிறதாம் மாருதி சுசூகி
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்இந்தியாவின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனது வாகனங்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு பொருட்களின் விலையேற்றம் காரணமாக எங்கள் நிறுவனத்தின் வாகனங்களின் தயாரிப்பு விலைகளும் ஏற்றம் கண்டுள்ளன.
எனவே இந்த விலையேற்றத்தைச் சமாளிக்க எங்கள் நிறுவனத்தின் வாகனங்களின் விலைகளை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாகனத்துக்கும் இந்த விலை உயர்வானது மாறும்’ என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் மாருதி சுசுகி நிறுவனம், தனது சி.என்.ஜி கார்களின் விலைகளை ஜனவரி, ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தியுள்ளது. அதேபோல தனது மிகவும் பிரபலமான ஸ்விஃப்ட் காருக்கான விலையை கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுசுகியின் மொத்த விற்பனை சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுசுகி நிறுவனம், 153,223 வாகனங்களை விற்றது. அதே நேரத்தில் இந்த ஆண்டு 139,184 வாகனங்கள் மட்டுமே விற்றது மாருதி. கார் தயாரிப்புக்கு முக்கியமான மூலப் பொருளாக இருக்கும் செமி-கண்டக்டர் கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் இந்த வாகன விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.