தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான ‘ஃபிரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவின் நேசமணி என்ற கதாபாத்திரம் தொடர்பான ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவில் இஞ்சினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில், சுத்தியல் குறித்து ஒருவர் இது என்ன என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் பிரபாகர் என்ற இளைஞர், ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி சீனை விவரித்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.
அவரது பதிவில், ‘இதை எதிலாவது அடித்தால் டங் டங் என்ற சத்தம் வரும். பெயிண்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து அவர் பாதிக்கப்பட்டார் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவினை விக்னேஷ் பிரபாகரின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கியதையடுத்து, உலகளவில் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில், இந்த ஹேஷ்டேக்கை உருவாக்கி நேசமணியை உலகளவில் ட்ரெண்ட் செய்த இளைஞர் விக்னேஷ் பிரபாகர், வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தூத்துக்குடியை பூர்விகமாகக் கொண்ட விக்னேஷ் சிவில் என்ஜினியர் ஆவார். தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். நேசமணி ட்ரெண்டிங் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துக் கொண்ட அவர், இளைஞர்கள் கையில் இருக்கும் இணையத்தில் வலிமையை உணர்ந்ததாக கூறி, அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
'இதனை திட்டமிட்டு செய்யவில்லை என்றும், நண்பர்களிடம் வேடிக்கையாக பேசிய ஒரு காமெடி சீன் இந்த அளவிற்கு ட்ரெண்டாகும் என கனவிலும் நினைக்கவில்லை. விளையாட்டாக செய்த ஒன்று தான். பிரார்த்தனை செய்யவும், விவாதிக்கவும் நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கும்போது இப்படி செய்தது பற்றி பலர் விமர்சிக்கலாம். ஆனால், இது திட்டமிட்டு நடந்த விஷயம் அல்ல. நாட்டில் நடக்கும் பல விஷயங்களுக்கு குரல் கொடுக்க சமூக வலைதளம் பெரிதும் உதவும் என்பதை இதில் இருந்து தெரிந்துக் கொண்டேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹலோ துபாயா..?- நேசமணிய உலகம்பூரா ட்ரெண்டாக்கியது இவர் தான்..! வீடியோ