'மாஸ்டர்' விஜய்யின் குட்டி ஸ்டோரி - உலக அளவில் ஹிட்டு- Class Room-ல் கேட்கும் வெளிநாட்டு மாணவர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில தினங்களிலேயே யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்கள் அந்த பாடலை பார்த்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத், இந்த பாடல் சர்வேதச அளவிலான மியூசிக் சார்ட்டில் 3 ஆம் பிடித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் குட்டி ஸ்டோரி பாடலை ஒளிபரப்பு செய்து, தாளம் போட்டு அதனை கேட்டு ரசிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த தளபதி ரசிகர்கள், குட்டி ஸ்டோரி பாடல் உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குட்டி ஸ்டோரி பாடலை அருண்ராஜா காமராஜா எழுதியுள்ளார். தளபதி விஜய்யின் ஸ்டைலான குரலும், நம்பிக்கையளிக்கக்கூடிய பாடல்வரிகளும் இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்கு ஒரு பெரும் காரணம் என்று கூறப்படுகிறது. அனிமேஷனால் அமைக்கப்பட்ட லிரிக்கல் வீடியோவிற்கே இந்த வரவேற்பு என்றால் தியேட்டரில் தளபதி டான்ஸூடன் இந்த பாடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்' படம் ஏப்ரல் மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா அர்ஜூன் தாஸ், ஷாந்தனு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார்.