ஒவ்வொரு முறையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் போதும் தியேட்டரே திருவிழா கோலம் காணும். இப்பொழுது வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் 'தர்பார்'. இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியாகியுள்ளது. அதில், "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , KS ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'லிங்கா’ . இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருந்தேன் .
லிங்கா படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி 'லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர். அதனால், 'லிங்கா' படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் 'லிங்கா' கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது . ரஜினி சார் படம் வெளியாகும் போது இப்படி எல்லாம் பல இடையூறுகள் வரும் .ஆனால் எங்கள் படத்தில் இடம் பெறும் "உண்மை ஒருநாள் வெல்லும்..இந்த உலகம் உன் பேர் சொல்லும்" பாடல் வரிகளைப்போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குறியது ".