தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். மேலும் திரையுலக பிரபலங்களும் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநரும் பிரபல நடிகருமான ரமேஷ் கண்ணா வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, தசரதபுரம் காரியப்பா பள்ளிக்கு வாக்களிக்க சென்றேன். காலை 6 மணி முதல் 7 மணி வரை நின்றேன். எனது பெயர் பட்டியலில் இல்லை என்றார்கள்.
பட்டியலில் இல்லை என்றால் என்ன என் கையில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறதே என்றேன் . பூத் ஸ்லிப் இல்லை என்று காரணம் கூறுகிறார்கள். ஆனால் எனது மனைவியின் பெயர் உள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு முறையாக பதிலளிக்கவில்லை. வாக்களிக்க முடியாமல் போய்விட்டதே இப்போது முறையாக பதிலளிக்க ஆள் இல்லை என்று கூறியுள்ளார்.