தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் தங்களுக்கு உரிய வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக காலை முதலே வாக்குச்சாவடி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்களான தர்பார், இந்தியன் 2 தளபதி 63, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றத்தவறவில்லை.
அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலையிலேயே வந்து வாக்களித்தார். அப்போது ரசிகர்கள் அவரை தங்களது செல்போன்களில் படமெடுத்தனர்.
'தர்பார்' படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை வந்தார். அதனைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 18) வாக்களிப்பதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய்யும் தனது வாக்கை பதிவு செய்வதற்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
மேலும் நடிகர்கள் விஜய் ஆண்டனி, கௌதம் கார்த்திக், ஸ்ரீகாந்த், செந்தில் நடிகைகள் மீனா, குஷ்பு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் வாக்களித்தனர்.
தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் ரஜினி, கமல், விஜய், அஜித் : வீடியோ இதோ வீடியோ