பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அறிமுக இயக்குநர் இளன் இயக்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்திருந்தார். இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை பெற்றது.
இதையடுத்து, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின் படி, ‘பியார் பிரேமா காதல்’ இயக்குநர் இளனின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.
இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகையிடமும், பிரபல இசையமைப்பாளரிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன்.6ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.