#MatineeMemories - ''அன்னைக்கு தியேட்டர்ல எனக்கு நடந்த விஷயம்தான்..'' - அசோக் செல்வன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல விவாதங்கள் கிளம்பி இருக்கிறது. அதற்கு சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல. இப்போது திரையரங்கம் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால், ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்களில் படம் பார்க்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் படங்களை நேரடியாக OTT Platform-களில் ரிலீஸ் செய்யலாம் என ஒருபக்கம் யோசனைகள் கிளம்ப, அப்படி செய்தால் திரையரங்கம் என்பது காணாமல் போய்விடும், ரசிகர்களுக்கான கொண்டாடங்கள் இல்லாமல் போய்விடும் என இன்னொரு பக்கம் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், என்னதான் ஹோம் தியேட்டரில் படம் பார்த்தாலும் அது தியேட்டர் அனுபவத்துக்கு ஈடாகுமா என்பது யோசிக்கவேண்டிய உண்மைதான்.  இந்த நேரத்தில் திரையரங்கத்தையும் அந்த பேரனுபவத்தையும் மிஸ் செய்யும் மக்களுக்காகவே உருவானது தான் நம் Matinee Memories. அப்படி மறக்கமுடியாத தனது தியேட்டர் நினைவுகளை இந்த அத்தியாத்தில் பகிர்ந்து கொள்ளப் போகிறவர், வேறு யாருமில்லை, தற்போதைய தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் அசோக் செல்வன்தான்.

அசோக் செல்வனின் மேட்னி மெமரீஸ் | oh my kadavule actor ashok selvan shares his theatre moments in matinee memories

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இந்த வருடத்தின் சூப்பர் ப்ளாக்பஸ்டர் கொடுத்த அசோக் செல்வன், தியேட்டர்கள் பற்றி என்றதுமே செம ஆர்வமாக பேச ஆரம்பித்துவிட்டார். நமது உரையாடலில் அவர் கூறியதாவது, '' எனக்கு தியேட்டர்னாலே எப்பவும் பசங்க கூட போறதுதான். எந்த படமா இருந்தாலும் சரி, ரகளையா விசில் அடிச்சுட்டு பார்த்தாதான் அது எங்களுக்கு படம். அப்படி இருந்த எனக்கு சினிமா மேல ஒரு பெரிய மரியாதை வர்றதுக்கு முக்கியமான காரணம். தியேட்டர்ல நான் பார்த்த பருத்திவீரன். சினிமான்றது ஒரு ஜாலியான பொழுதுபோக்குன்றத தாண்டி, அதனால இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்னு நான் உணர்ந்தது பருத்திவீரன் பார்த்த அந்த நொடிதான். அதே மாதிரி 7ஜி ரெயின்போ காலனி, தளபதியோட பத்ரி இந்த ரெண்டு படத்தையும் என்னால மறக்கமுடியாது. 7ஜி ரெயின்போ காலனி படத்தை நான் காமதேனுன்னு ஒரு தியேட்டர்ல பார்த்தேன். அந்த தியேட்டரை அப்போ மூட போறதா இருந்தாங்க. கிட்டத்தட்ட 20 பேர்தான் உள்ள இருந்துருப்போம். அந்த க்ளாசிக் படத்தை நான் அப்படிதான் பார்த்தேன். அதுக்கப்புறம், காரைக்குடிக்கு அப்பா, அம்மாவோட ஒரு வேலையா போனப்ப, என்னையும் அக்காவையும் தியேட்டர்ல விட்டுட்டு போயிட்டாங்க. ஒரு புது ஊர்ல, யாருன்னே தெரியாத ஆட்களோட நானும் அக்காவும் பத்ரி படம் பார்த்தது இப்பவும் மறக்கமுடியாத ஒரு நினைவா இருக்கு' என தன் சிறுவயது நினைவுகளில் மூழ்கியவர், அடுத்த தன் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

தியேட்டர்ன்றது பலருக்கு சந்தோஷமான நினைவுகளை கொடுக்க கூடியது. ஆனா அதே தியேட்டர் எனக்கு பெரிய ஏமாற்றத்தையும், ஒரு வெறியையும் கொடுத்துச்சு. நான் சினிமாவுல சான்ஸ் தேட ஆரம்பிச்சு, ஒரு பெரிய படத்துல நடிக்கிற சான்ஸ் கிடைச்சுது. நானும் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் தேவி தியேட்டருக்கு கூட்டிட்டு, ஸ்க்ரீன்ல வர போறேன்னு ரொம்ப ஆர்வமா போனேன். ஆனா நான் நடிச்ச சீன் படத்துல வரல. ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு எனக்கு. ஆனா, அந்த சம்பவம் எனக்குள்ள ஒரு வெறியை உருவாக்குச்சு. இன்னும் பெருசா ஜெயிக்கனும்னு முடிவு பண்ணேன். அப்படி நான் உழைச்சதுக்கான பலனை ஏ.வி.எம் தியேட்டர்ல பார்த்தேன். நான் நடிச்ச தெகிடி படத்தை அங்க பார்க்கும் போது, படத்துக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் என்னால மறக்கவே முடியாது. நான் எதிர்ப்பார்க்காத சீனுக்கு கூட மக்கள் கைத்தட்டி ரசிச்ச அந்த மொமன்ட், எனக்கு செம எனர்ஜி கொடுத்துச்சு. அதே மாதிரி, ஓ மை கடவுளே படத்தை கோயம்புத்தூர் கங்கா தியேட்டர்ல பார்த்தது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, படத்துக்கு ப்ரீமியர்ல நல்ல ரெஸ்பான்ஸ். இருந்தாலும் தியேட்டர்ல மக்கள் ஏத்துக்குறதுன்றது பெரிய விஷயமாச்சே. ஆனா கங்கா தியேட்டர்ல ஃபர்ஸ்ட் ஷோ, ஆடியன்ஸ் செமயா என்ஜாய் பண்ணி படத்தை பார்த்தாங்க. அப்பாடா, படம் மக்களுக்கு பிடிச்சுடுச்சு, கண்டிப்பா ஹிட் ஆகும்னு மனசுல தோனிடுச்சு'' என அவரது படத்தை போலவே ஒரு க்யூட் லவ் ஸ்டோரியாக தன் Matinee Memories-ஐ நமக்காக பகிர்ந்து கொண்டார்.

என்ன..?, அசோக் செல்வன் மாதிரியே உங்களுக்கும் ஒரு ஏமாற்றமும், ஜெயிக்கனும்ன்ற வெறியும் ஏதோ ஒரு இடத்துல கண்டிப்பா ஏற்பட்டிருக்குமே. அதை நியாபகம் வச்சிக்கிட்டு வெறித்தனமா ஓடுங்க.. ஒருநாள் நம்ம ஹீரோவை போலவே, உங்க வெற்றியை பார்த்து, ஓ மை கடவுளே வாயை பிளப்பாங்க..!

Entertainment sub editor