மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'சைக்கோ' திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு இளையராஜாவின் இசை முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மிஷ்கின் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட “அளவில்லாத அன்பு” என்றே கூறுவேன். படத்தை பார்த்த மக்கள் எடுத்து சென்றதும், கொடுத்ததும் அதுதான்.
எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகை பின்புலத்தில் கதை சொன்னாலும், பார்க்கும் பார்வையாளன் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே, அதனை கொண்டாடுவான். நான் இந்தப்படங்களை கண்மூடித்தனமான நம்பிக்கையில் தான் உருவாக்கினேன்.
ஆனால் இறுதியில் அளவிலா அன்பை பெற்றிருக்கிறேன். “கண்மூடித்தனாமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்” இரண்டும் தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புவன் நான். ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்து செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம்.
இதே போல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தை தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் நன்றி'' என்றார்.