#TentkottaDiaries - ''அன்னைக்கு ரஜினி.. கமல் படத்தை பார்க்க நான் பட்டபாடு இருக்கே.'' - அருண்ராஜா காமராஜ்.
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் உலகம் முழுக்கவே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் நாம் வெளியில் செல்ல முடியாமல் பல விஷயங்களை மிஸ் செய்கிறோம். இளசுகளுக்கு தினமும் கூடும் டீக்கடை என்றால், பெரியவர்களோ வாக்கிங் செல்லும் பார்க்கையும், கோவிலையும் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். ஆனால், இதில் அதிகம் மிஸ் செய்யப்படும் மற்றொரு இடம்தான் தியேட்டர்கள். விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம் தொடங்கி எத்தனையோ படங்கள் வைரஸ் அச்சுறுத்தலால் தள்ளி போயிருக்கின்றன. வெறித்தனமான ரசிகர் முதல் ரொம்ப மன இறுக்கமா இருக்கு, தியேட்டருக்கு போய் ஒரு ஜாலி படம் பார்க்கலாம் எனும் ஜெனரல் ஆடியன்ஸ் வரை இப்போது திரையரங்கம் எனும் பேரனுபவம் கிடைக்காமல் இருக்கின்றனர். இத்தகைய சூழலில், தியேட்டர்களையும், அதன் நினைவுளையும் பற்றி பிரபலங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நினைவுகளின் கதையே இந்த ''டெண்ட்கொட்டாய் டயரீஸ்''.
இதுகுறித்து கனா படத்தின் மூலம் தனது கனவையும் மெய்யாக்கி சூப்பர் ஹிட் அடித்த இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் பேசினோம். அப்போது அவர், மறக்க முடியாத தன் தியேட்டர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, '' நான் குளித்தலைக்கு பக்கத்து ஊரில்தான் சிறுவயதில் வசித்தேன். அப்போது புதுப்படம் பார்க்க வேண்டுமென்றால், திருச்சிக்கு சென்றுதான் பார்க்க முடியும். நாங்கள் குளித்தலைக்கு வருவதற்கு முன்னால், அப்படி திருச்சி சென்று படம் பார்ப்பதுதான் வழக்கம். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என குடும்பத்தோடு, ஒரு டூருக்கு சென்று வருவது போலதான் படத்துக்கு செல்வது. அப்படிதான் அன்று ரஜினி நடித்த தளபதி படம் பார்க்க குடும்பத்தோடு கிளம்பினோம். திருச்சி கலையரங்கம் தியேட்டருக்கு சென்று தளபதி படமும் பார்த்தாச்சு. ரஜினி, மம்மூட்டி, செம ஆக்ஷன் என படம் பட்டையை கிளப்பியது. எப்போதும் போல ஊருக்கு கிளம்ப முடிவு செய்துவிட்டார்கள்.
ஆனால் இப்படி ஒரு சான்ஸ் எப்போது கிடைக்கும் என தெரியாதே. அதனால் நானும் என் அண்ணனும், அப்படியே கமல் நடித்த குணா படத்துக்கும் ஒரு விசிட் அடிக்க முடிவு செய்துவிட்டோம். அப்பாவையும், அம்மாவை நச்சரித்து, ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்து, தளபதி பார்த்த கையோடு, குணா படம் ஓடும் தியேட்டருக்கு சென்றுவிட்டோம். குணாவையும் பார்த்துவிட்டு, முழு மன நிறைவோடு குடும்பத்துடன் திருச்சியிலிருந்து குளித்தலை பயணம். இப்போது வளர்ந்துவிட்டோம், ஒரு படம் பார்த்துவிட்டு, ரொம்ப ஈசியாக அடுத்த காட்சியில் இன்னொரு படத்தை பார்க்கலாம், ஏன் அதே படத்தை கூட திரும்பி பார்த்துவிட்டு வரலாம். ஆனால் அந்த சிறுவயதில், அப்பாவை நச்சரித்து, அடுத்தடுத்த காட்சிகளில் ரஜினி படத்தையும், கமல் படத்தையும் பார்த்தது எப்போதுமே மனதுக்கு ரொம்ப ஸ்பெஷலான மெமரீஸ்தான்'' என தன் டெண்டுகொட்டாய் டயரீஸை நமக்காக சொன்னார்.
உண்மையாகவே தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினி, கமல் படத்தை அடுத்தடுத்து பார்ப்பது என்பது மறக்கமுடியாத மெமரீஸ்தான். என்ன நண்பா.!!