#MatineeMemories - ''தியேட்டர்ல படம் பார்த்து பயந்துட்டேன்.. ஆனா அதே தியேட்டர்ல..'' - ஹலிதா ஷமீம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா வைரஸ் வந்ததால் நாம் நிறைய மிஸ் செய்திருக்கிறோம். கிரிக்கெட் ஆடும் கிரவுண்ட், அட்டி அடிக்கும் பொட்டி கடைகள், காபி ஷாப் சந்திப்புகள், பீச் பொழுதுகள், வழிபாட்டுத் தளங்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ப ஏதோ ஒன்றின் அனுபவம், இந்த இரண்டு மாதங்களாக இல்லாமல் இருப்பதை நம்மை சுற்றியுள்ளவர்களை பார்த்தாலே தெரிகிறது. அப்படி பல பேர் நிச்சயமாக இழந்த ஒரு பேரனுபவம்தான் தியேட்டர். 500 - 1000 பேரோடு ஒரு இடத்தில் அமர்ந்து, அவர்களோடு சிரித்து, அழுது, கோபப்பட்டு ஒரு படத்தை பார்ப்பது என்பது எவ்வளவு அருமையான அனுபவம். தற்போது இந்த வைரஸ் நெருக்கடியால் நம்மாட்கள் தியேட்டர் பக்கமே போகாமல் இருக்கிறார்கள். நாம் சினிமாவில் பார்த்து ரசித்த மனிதர்களுக்கும் திரையரங்க அனுபவம் இருக்கும். அதுவே அவர்களை சினிமாவை நோக்கி உந்தி தள்ளும் காரணமாகவும் இருந்திருக்கும். அத்தகைய நினைவுகளை மனதில் கொண்ட கலைஞர்களின் கதைகளான ''Matinee Memories'' அடுத்த அத்தியாயத்தில் ஹலிதா ஷமீமுடன் பேசினோம்.

ஹலிதா ஷமீம் திரையரங்க அனுபவங்கள் | sillukaruppatti director halitha shameem shares her theatre experience in behindwoods matinee memories

திரைவடிவில் கவிதை படைத்தவர். கலை வடிவில் ஓவியம் வடித்தவர். இப்படி சமூக வலைதளங்களில் சமீப காலத்தில் கொண்டாடப்பட்ட சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம், திரையரங்கம் பற்றி என்றதுமே செம குஷி ஆகி பேச ஆரம்பித்துவிட்டார். அப்போது அவர் கூறியதாவது, ''எனக்கு சின்ன வயசுல இருந்து படம்னாலே பிடிக்காது. பெருசா படம் பார்க்க ஆர்வமே காட்ட மாட்டேன். அப்படி இருந்த என்னை, ஒரு நாள் ஏமாத்தி படத்துக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அது மணிரத்னம் சார் எடுத்த அஞ்சலி. அப்போ என் அஞ்சு வயசுல நானும் அஞ்சலி பாப்பா மாதிரிதான் இருப்பேனாம். என் முதல் தியேட்டர் அனுபவமே என் விருப்பத்தை மீறி நடந்ததுதான். ஒரு கட்டாய கல்யாணம் மாதிரி. அதுக்கு அப்புறம் மறக்க முடியாத அனுபவம்னா, அது தேவி தியேட்டர்ல சிறைச்சாலை பார்த்ததுதான். அந்த சவுன்ட்டோட தியேட்டர் அதிர படம் பார்த்து பயங்கரமா பயந்துட்டேன். உண்மையாவே இந்த குதிரை ஓடுறது, துப்பாக்கியில சுடுறது எல்லாம் இங்கதான் நடக்குதோன்னு பயந்து அம்மாவை கட்டி பிடிச்சுட்டு உட்கார்ந்திருந்தேன். அந்த தேவி தியேட்டரை என்னால மறக்கவே முடியாது. அதுக்கு அப்புறம் சினிமானாலே எனக்கு தேவி தியேட்டர்தான். என் சினிமா கனவுக்கு அங்க அலைபாயுதே பார்த்ததும் ஒரு காரணம். இன்னொரு செமையான விஷயம் தேவி தியேட்டர்லதான் நான் உதவி இயக்குநரா வேலை பார்த்த ஓரம் போ படத்தோட ஷூட்டிங்கும் நடந்துச்சு. அதுக்கு அப்புறம் என் படம் பூவரசம் பீப்பிக்கு அங்க நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். இதையெல்லாம் தாண்டி தேவி தியேட்டர் கட்லட் என் தனி ஃபேவரைட்''.

தியேட்டர்னாலே எனக்கு செம சந்தோஷமாகிடும். அத்தனை பேரோடு ஒன்னா உட்கார்ந்து ஒரு படத்தை ஃபீல் பண்றது வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ். Online booking வர்றதுக்கு முன்னாடி சில முக்கிய படங்களுக்கு முன்பதிவு செய்ய புதன் கிழமை காலையில கார் பார்க்கிங் வரை கூட்டம் இருக்கும். நானும் அப்டி வரிசையில் நின்று டிக்கட் வாங்கி இருக்கேன். அப்புறம் லேடிஸ் Queue சின்னதாக இருக்கும். அதனால ஈசியா வாங்கிடுவேன். ஆனா அப்போ நான் மக்களோட ஆர்வத்தை பார்த்து ரொம்பவே ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். நான் நல்ல படம், மொக்க படம்னு எல்லாம் பார்க்கவே மாட்டேன். எந்த படமா இருந்தாலும் போய் உட்கார்ந்துடுவேன்.  படம் நல்லா இருந்தா இன்டர்வல்ல கூட வெளிய வர மாட்டேன். படம் முடிஞ்சு கொஞ்ச நேரம் அதே ஃபீலோட இருப்பேன். அதே படம் நல்லா இல்லைன்னா, முடிஞ்ச உடனே தெறிச்சு ஓடி, முதல் ஆளா கேட்டை தாண்டுறது நான்தான். இதே விஷயத்தை நான் என் படத்துக்கு அனுபவிச்சேன். சில்லுக்கருப்பட்டி படத்தை நான் பல தியேட்டர்கள்ல பார்த்தேன். சாதாரண தியேட்டர் முதல் மல்டிப்ளக்ஸ் வரைக்கும், நான் எப்படி இருந்தேனோ, அதே மாதிரி படம் முடிஞ்சு நிறைய பேர் எழுந்து போகவே இல்லை. அந்த ஃபீலோடு அவங்க உட்கார்ந்து இருந்ததை என்னால உணர முடிஞ்சுது'' என அவரின் மேட்னி மெமரீஸை தன் படத்தை போலவே க்யூட் அன்ட் ஷார்ட்டாக பகிர்ந்துகொண்டார் ஹலிதா ஷமீம்.

ஆக ஹலிதா ஷமீம் குப்பையாக தூக்கி போடும் பின்க் பேக்கில் மோதிரம் இருக்குமோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு தேவி தியேட்டர் டிக்கட் இருக்கும்.! என்ன சரிதானா நண்பர்களே.!!

Entertainment sub editor