செல்வராகவன் - க்ளீஷேக்களை உடைத்தெறிந்த ஜீனியஸ்.! மாஸ் ஐக்கானாக மாறியது எப்படி.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் என்றால் யதார்த்தம். செல்வராகவன் என்றால் முகத்தில் அறையும் உண்மை. செல்வராகவன் என்றால் உணர்வுகளின் ஆழம். இப்படி செல்வராகவனை வைத்து பல்லாயிரக்கணக்கான சொற்றொடரை எழுதிவிட முடியும். அப்படி ஒரு தவிர்க்க முடியாத தாக்கத்தை திரையில் ஏற்படுத்தியவர் அவர். பத்துக்கும் குறைவான படங்களை இயக்கிய ஒரு இயக்குநர். ஆனால், பெரும் பட்டாளமே அவருக்கு ரசிகர்கள். கிட்டத்தட்ட ஒரு ஹீரோவுக்கு இணையான மாஸ் கொண்ட இயக்குநர் என்றால் அது செல்வாதான். தனது இருபது வருட சினிமா வரலாற்றில், இத்தனை பேர் கொண்டாடும் அளவுக்கு அவர் என்ன செய்தார்..? காலச் சக்கரத்தை சற்றே பின் நகர்த்தி செல்வாவின் கலையை, கவிதையை, வலியை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியே இது.

செல்வராகவன் பிறந்தநாள் பதிவு | journey of selvaraghavan in tamil cinema and his movies

செல்வராகவனுக்கும் சரி தனுஷுக்கும் சரி முதல் படம் என்பது துள்ளுவதோ இளமை கிடையாது. அது இருவரும் தங்கள் ராட்சத பாய்ச்சலுக்காக பார்த்துக் கொண்ட ஒத்திகைதான். ஃப்ரெஷ்ஷான களம், யூத்ஃபுல் பாடல்கள் என துள்ளுவதோ இளமையிலேயே செல்வராகவன் அனைவரையும் கவர்ந்தார். இதை தொடர்ந்து 2003-ல் காதல் கொண்டேன். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ட்ரென்ட் செட்டர் படம் அது. கதாநாயகன் என்பவன் இப்படிதான் இருக்க வேண்டும் எனும் க்ளீஷேக்களை உடைத்து எறிந்துவிட்டு, விளிம்பு நிலை மனிதனான வினோத்தின் கதையை சொல்லினார் செல்வராகவன். ஆம், செல்வராகவன் படங்கள் எல்லாம் அப்படியான மனிதர்களின் உணர்வை பேசும் படங்களே. அத்தகைய உணர்வுகளை திரை மொழியில் அழகாக வரைவதில் செல்வராகவன் எப்போதுமே ஜீனியஸ்தான். காதல் கொண்டேனில் முதல் காட்சியில்  அநாதை ஆசிரமத்துக்கு வரும் துணிகளில், ஒரு பேன்ட்டை வினோத் எடுக்க, அதற்கு மற்றொருவன் போட்டி போடுவான். இறுதியில் அந்த பேன்ட் வினோத்துக்கு கிடைக்காது. அதுதான் படத்தை க்ளைமாக்ஸும் கூட. வினோத்தால் எப்போதும் ஆசை மட்டுமே பட முடிகிறது. இப்படி திரை மொழியால் கதை சொல்லி, முகத்தில் சாக்பீஸ் துகளோடு கணக்கை சரி செய்த வினோத் போல, தன் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை திருப்பினார் செல்வா.

மிகவும் ஆழமான விஷயங்களை கையாள்வதில் செல்வராகவனுக்கு இணை அவர் மட்டுமே. ஒரு மனிதனுக்கு காதலுக்கு பின் வரும் காமத்தை மிக அருமையாக கையாண்டிருப்பார் செல்வா. வினோத்துக்கு திவ்யாவை கண்டதும் முதலில் வருவது காதலே. அதன் பின்னரே அவன் காமத்தை அறிந்து கொள்கிறான். இரண்டுக்கும் நடுவில் சிக்கிதவிக்கிறான். அதே சமயம் 7ஜி ரெயின்போ காலனியில், கதிருக்கு அத்தகைய உணர்வு எல்லாம் தெரிந்த பின்னரே அவன் அனிதா மீது காதல் கொள்கிறான். அவன் அசுத்தங்கள் எல்லாம் சுத்தமாகி, அவனுள் நிறைந்திருப்பது காதலும் அன்பும் மட்டுமே. முதல் பாதியில் அனிதாவுக்கு தெரியாமல் அவளின் உடைகளை எடுத்து கொண்டு வரும் கதிர், இறுதியில் அவள் இறந்த பின், அவளது தலையணையை எடுத்து கொண்டு வருவான். அதுதான் அவனுக்குள் நிகழ்ந்த மாற்றம். அதுதான் செல்வராகவன் திரைமொழி. இந்த இரண்டு படங்களுக்கும் மேலும் உயிர் கொடுத்தது யுவனும் - நா.முத்துக்குமாரும். காதல் கொண்டேனில், திவ்யா வினோதுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்புவாள். அதுவரை அவளுடன் பழகி வந்த வினோத்துக்கு, அந்த கணம் முதல் அவள் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். இதை நா.முத்துக்குமார், 'தொட்டு தொட்டு போகும் தென்றல், தேகம் எங்கும் வீசாதோ. விட்டு விட்டு தூறும் தூறல், வெள்ளமாக மாறாதோ' என எழுதியிருப்பார். அதற்கு யுவனின் இசை மேலும் மெருகேற்றும் விதமாக அமைந்தது. இப்படி எல்லாம் சரியான அலைவரிசையில் அமைந்து வருவதுதான் செல்வராகவன் படங்களின் சிறப்பு. மேலும் 7ஜியில் கதிரின் கதாபாத்திரம் மிக அழகான ஒரு க்ராஃபில் இருக்கும். ஒரு தறுதலையாக, படிப்பில் நாட்டமில்லாதவனாக, அப்பாவுக்கு அடங்காதவனாக இருப்பவன் அவன். அவனையும் அவன் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றும் தேவதைதான் அனிதா. செல்வராகவன் படங்களின் நாயகிகள் எல்லோருமே அப்படியான தேவதைகள்தான். அப்படிதான் அவர்களது பாத்திரங்கள் எழுதப்படுகிறது.

அடுத்து புதுப்பேட்டை. புதுப்பேட்டை என்பது எப்போதுமே செல்வராகவன் ரசிகர்களுக்கு தனி ஸ்பெஷல்தான். வேறு ஒரு களத்தில் செல்வராகவன் செய்த மாயாஜாலமே புதுப்பேட்டை. புதுப்பேட்டை ஒரு கேங்ஸ்டர் படம் என்பதை தாண்டி சென்னையின் மைய அரசியலை அருமையாக பேசிய ஓர் அரசியல் படம். மற்ற அனைவரையும் தாண்டி தனுஷ் - அழகம் பெருமாள் இருவரின் கதாபாத்திரங்களை செல்வராகவன் எழுதிய விதம், ஆண்டுகள் கடந்து பேசப்படும். ஒரு தாதா என்பவன் வாட்ட சாட்டமாக, பத்து பேரை அடித்து துவைக்கும் அளவுக்கு பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும். யார், அப்படி எழுதி வைத்தார்கள்.. என வழக்கம் போல புதுப்பேட்டையிலும் இங்கு நிலவி வரும் க்ளீஷேக்களை உடைத்தெறிய செல்வராகவன் தவறவில்லை. சாதாரண மனிதன்தான், அவனின் அசாதாரணமான தைரியமும் ஆசையும் அவனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். அதுதான்  Survival of the Fittest. அதுதான் செல்வராகவனின் புதுப்பேட்டை. தேர்தலுக்கு சீட்டு கொடுக்கும் விஷயத்தை புதுப்பேட்டை காட்டிய அளவில், இதுவரை எந்த படமும் காட்டவில்லை. அந்தளவுக்கு அதில் யதார்த்தம் இருக்கும். இசை, ஒளிப்பதிவு, நடிப்பு, வசனம் என புதுப்பேட்டை, உலக சினிமாவின் முக்கியமான ஒரு படமாக எப்போதும் கொண்டாடப்பட வேண்டியது.

பிரமாண்டம் என்பது வானுயற கட்டடங்களில் இல்லை. தெறிக்கும் க்ராபிக்ஸில் இல்லை. அதற்கு மிகப்பெரிய வைட் ஷாட்கள் எல்லாம் வேண்டாம். உணர்வுகளை மட்டுமே வைத்து நமக்குள் பிரமாண்டத்தை கடத்த முடியும் என செல்வராகவன் உடைத்த அடுத்த க்ளீஷே ஃபர்னிச்சர்தான் ஆயிரத்தில் ஒருவன். ஆயிரத்தில் ஒருவனின் முதல் பாதி, கண்டிப்பாக எந்தவொரு ஹாலிவுட் ஃபேன்டஸி படத்துக்கும் சவால் விட கூடியது. அதை எல்லாம் மிஞ்சிவிட கூடியது படத்தின் இரண்டாம் பாதி. சோழனின் கதையை படம் நெடுக, பல்வேறு ஓவியங்களின் வழியே பேசியிருப்பார் செல்வராகவன். ஆடல், பாடல், கலை என்பது எப்போதுமே தமிழர் வாழ்வியலில் கலந்த ஒன்று. தஞ்சையை விட்டு போன சோழன் திரும்பி வருவான் என தஞ்சாவூரில் கூத்து கட்டுவார்கள். தூதுவன் வந்து அழைத்து செல்லும் போது ஆடல், பாடல் என மன்னன் கொண்டாடுவார். இப்படி நமது கொண்டாட்டங்களை கூட காட்சி மொழியில் அழகான கவிதைகளாக எழுதியவர் செல்வராகவன். க்ளைமாக்ஸ் காட்சியில், சோழனின் கண் முன் அவனது மொத்த படைகளும், அவனை தஞ்சை அழைத்து செல்ல கப்பல்களில் வந்திருப்பதாக அவன் கற்பனை செய்து பார்ப்பான். அப்படியான கற்பனைகள் நிறைந்ததுதான் மரணத்தின் கடைசி நொடிகள். இப்படி ஆயிரக்கணக்கான மெல்லிய நுண்ணணர்வுகளை அழகியலோடு கையாள்வதினால் தான், செல்வராகவன் ஜீனியஸ் என கொண்டாடப்படுகிறார்.

மேலும் செல்வராகவனின் மயக்கம் என்ன செல்வாவின் ரசிகர்களை தாண்டி பலருக்கு ஃபேவரைட். காரணம், மனம் நேசித்த தொழிலை செய்ய வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரின் மனநிலையும் மயக்கம் என்ன படத்தில் நிறைந்திருக்கும். எந்த துறையாக வேண்டுமானால் இருக்கட்டும், உடைந்து போய், அடுத்து என்ன தவித்து நிற்கும் போது, மயக்கம் என்ன போல் ஒரு அருமருந்து இல்லை. அப்படியான மோட்டிவேஷன் அம்சங்கள் நிறைந்த ஒரு படைப்பு அது. அடுத்து இரண்டாம் உலகத்தில், அன்பு, காதல் என்பதை மட்டுமே கொண்டு இருவேறு உலகங்கள் இயங்கினால் எப்படி இருக்கும் என்ற செல்வாவின் கற்பனை காலத்திற்கு அப்பாற்பட்டது. எப்போதும் போல தனது விஷுவல் ப்யூட்டியை செல்வராகவன் இரண்டாம் உலகத்திலும் நிருபித்தார். இதற்கு பிறகு என்.ஜி.கே. மிகப்பெரிய மாஸ் ஹீரோவான சூர்யாவின் படத்தில், தனது ட்ரேட்மார்கை காட்டியதோடு, பக்கா மாஸ் படத்தையும் தன் ஸ்டைலில் எடுக்க முடியும் என காட்டியவர் செல்வராகவன். இன்னும் பலரின் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸுக்கு காத்திருக்கிறது நெஞ்சம் மறப்பதில்லை. இதன் ட்ரெய்லர்களும் பாடல்களுமே செல்வாவின் டச் அதில் நிறைந்திருப்பதை சொல்லிவிடுகிறது.

இப்படி தன் கரியர் முழுவதும், புதுமைகளை செய்து வந்த ஒரு இயக்குநர் செல்வராகவன். நீங்கள் எதையெல்லாம் இங்கு ஒரு டெம்ப்ளேட் என்றும், சக்சஸ் ஃபார்முலா என்றும் வைத்திருக்கிறீர்களோ, அதை எல்லாம் நான் உடைப்பேன் என்பது தான் திரைமொழியில் செல்வராகவன் சொல்லிவரும் ஸ்டேட்மென்ட். அதைதான் அவர் இத்தனை காலம் செய்து வந்தார். இனியும் செய்ய போகிறார். இப்படி ஒரு ட்ரென்ட் செட்டரை பிறகு ஏன் ரசிகர்கள் கொண்டாடாமல் இருப்பார்கள். தனது வித்தியாசமான கதை சொல்லாடல் மூலம் காதலை, இசையை, சினிமாவை ஒரு தலைமுறைக்கே, விருந்தாக வைத்தவர் செல்வராகவன். அதனால் தான், திரைக்கதை எழுதும் அவரது சிறு போட்டோ கூட, இது புதுப்பேட்டை 2-ஆ, ஆயிரத்தில் ஒருவன் 2-ஆ, தனுஷ் படமா, லவ் படமா என பல எதிர்ப்பார்ப்புகளை கிளப்புகிறது. அதுதான் செல்வாவின் மாஸ்.!

புதுப்பேட்டையில் 100 பேருக்கு மத்தியில் அடிவாங்கி, மீண்டு எழுந்து கொக்கி குமார் வரும் போது பின்னால் ஒரு சூரியன் உதித்து உயர்ந்து நிற்கும். அப்படிதான் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இப்போது வரை உயர்ந்து நிற்கிறார்.

Entertainment sub editor