தனுஷ் நடிப்பில் வெளியான சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையும், நிகோலஸ் எறேரா பின்னணி இசையும் அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இப்படம் தமிழில் வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ‘பக்கிரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்திற்கு ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது. இது தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் வரும் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலில் இடம்பெறும் வரி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் கூறுகையில், ‘'தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும். எனது ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி’ என்றார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டப் வெர்ஷனான ‘பக்கிரி’ வரும் ஜூன்.21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.