7G ரெயின்போ காலனி - பருத்திவீரன் : ஹீரோயின்கள் தேவதைகள் ஆனது எப்படி தெரியுமா..!
முகப்பு > சினிமா செய்திகள்7ஜி ரெயின்போ காலனி படத்தை செல்வராகவன் இயக்கினார். அதே போல பருத்திவீரன் திரைப்படத்தை அமீர் இயக்கினார். இரு படங்களின் களங்களும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவை. ஆனால், அவற்றுள் மிக அழகான ஒரு ஒற்றுமை இருக்கிறது.
செல்வராகவன் படங்கள் என்றாலே அதில் கதாநாயகிகளின் கதாபாத்திரம் கனமானதாக இருக்கும். அப்படிதான் 7ஜி ரெயின்போ காலனியிலும். வெட்டி பையனாக இருக்கும் கதிரை சரியான பாதைக்கு கொண்டு வருவது அனிதாதான். அதுவே பார்வையாளர்களுக்கு மத்தியில் அந்த கதாபாத்திரத்தை மிகப்பெரிய இடத்தில் வைத்துவிட்டது. அதையும் கடந்து, அனிதாவை ஒரு தேவதையாக மாற்ற செல்வராகவன் செய்ததுதான் அந்த க்ளைமாக்ஸ் காட்சி. அனிதா கதிருடன் விரும்பிதான் வீட்டை விட்டு வருகிறாள். இருவரும் இரவை ஒன்றாக கழிக்கின்றனர். மறுநாள் அவள் விபத்தில் இறந்துவிடுகிறாள். இப்போது கதிர் அனிதாவின் பெற்றோரிடம், அவள் விரும்பி வரவில்லை, நான் தான் கட்டாயப்படுத்தினேன் என பொய் சொல்கிறான். அந்த பொய்யால் காலத்துக்கும் அனிதா அவள் குடும்பத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறாள். கதிர் கெட்டவனாகிறான்.
அதே போலதான் பருத்திவீரனிலும். முத்தழகு பருத்திவீரனை விரும்பி, தன் வீட்டை எதிர்த்து அவனுடன் ஓடிபோகிறாள். எதிர்ப்பாராத விதமாக அவள் கற்பழிக்கப்பட்டு இறந்து போகிறாள். இப்போது 7ஜியில் இருந்த அதே விஷயம்தான். என்னை விட்டுட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ண கண்டந்துண்டமாக வெட்டுவேன்னு சொன்னேன்ல என முத்தழகுவின் அப்பா முன்பு போலியாக நடித்து அவன் அவளை சரமாரியாக வெட்டுகிறான் பருத்திவீரன். இப்போது அவள் கழ்பழிக்கப்பட்டால் என்றது மறைந்து போய், அவளை பருத்திவீரன் கொலை செய்தது மட்டுமே பேசப்படுகிறது. முத்தழகு தேவதையாகிறாள். பருத்திவீரன் கெட்டவனாகிறான்.
இப்படி இருவரும் ஒரு உண்மையை மறைத்து சொல்லும் பொய்யினால், இரண்டு கதாநாயகிகளுமே தேவதைகள் ஆகின்றனர். அவர்களது களங்கம் துடைக்கப்படுகிறது. இப்படியான தேவதைகளை உருவாக்கும் கதாநாயகர்கள் என்றுமே ஆண் தேவதைகள்தான். அவர்களை நமக்களித்த ஜீனியஸ் இயக்குநர்கள் செல்வராகவனையும் அமீரையும் எப்பொழுதுமே பாராட்டி கொண்டிருக்கலாம்.