தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் வரும் ஆகஸ்ட்.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.