தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அபிராமி வெங்கடாச்சலம், அஜித் பற்றியும், நேர்கொண்ட பார்வை குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், ‘நேர்கொண்ட பார்வை வெறும் ஷூட்டிங் மட்டுமல்ல, என் வாழ்வில் நடந்த அதிசயம். அதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட்.10ம் தேதி ரிலீசாவதில் மிக்க மகிழ்ச்சி. எனது நெஞ்சார்ந்த நன்றிகள் எல்லோருக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் பணிபுரியும் வாய்ப்பளித்த போனி கபூர் சாருக்கு நன்றி. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.
திரைப்படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. நேர்கொண்ட பார்வை எப்போழுதும் எனது நெஞ்சில் நீங்காது இருக்கும்.. அஜித் சாருடன் இருப்பது பற்றி நினைக்கும்போது வானில் பறந்து நட்சத்திரத்தை தொட்டுவிட்டு பூமிக்கு திரும்பியது போன்ற உணர்வு எனக்கு. என் வாழ்வில் நான் சந்தித்த சிறந்த மனிதர். நேர்கொண்ட பார்வைக்காக நானும் காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.