அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் இடம்பெறும் ஆன்தெம் பாடலுக்கு இசையமைக்க ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உலக ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம் வரும் ஏப்.26ம் தேதி வெளியாகிறது.
கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் பாதி கதையுடன் முடிந்து மார்வெல் ரசிகர்களை ஏமாற்றியது. அந்த படத்தின் வில்லனான தானோஸ் உலகின் பாதி மக்களை அழித்துவிட்ட நிலையில், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம், அதன் தொடர்ச்சியாக சூப்பர் ஹீரோஸ் கூட்டணி ஒன்றாக இணைந்து மீதமுள்ள மக்களை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததுடன், எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஆன்தெம் பாடலை உருவாக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் தயாராகும் இப்பாடல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், ‘எனது குடும்பத்திலேயே மார்வெல் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமான இசையை கொடுக்க எனக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.
`அயர்ன்மேன்', `தார்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான அவெஞ்சர்ஸின் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தையும் சேர்த்து மொத்தம் 21 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இறுதிப்படமாக வெளியாகவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.