மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி உடன் தான் பேசி வருவதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

திரைப்படம், நாடகம் என நடித்து புகழ் பெற்றவர் எஸ்.வி.சேகர். இதுவரையில் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான நாடகங்களில் நடித்து உள்ளாராம். 2006-ம் ஆண்டு முதன் முதலாக அதிமுக-வின் சார்பில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார் எஸ்.வி.சேகர்.
அதன் பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுக உடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு முதல் பாஜக-வில் இருந்து வருகிறார் எஸ்.வி.சேகர். தொடர்ந்து அவ்வப்போது தனது கருத்துகளால் பல சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறார் எஸ்.வி.சேகர்.
பெண் ஊடகவியலாளர்கள் குறித்துப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாகி அந்த விவகாரத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த வகையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் ஆவி உடன் பேசி வருவதாகக் கூறி பகீர் கிளப்பியுள்ளார் எஸ்.வி.சேகர். மேலும், இது போல் ஆவிகளுடன் நாம் நினைத்தால் மட்டும் பேச முடியாது அவர்களும் நினைத்தால் தான் பேச முடியும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எஸ்.வி.சேகர், "நான் மறைந்த ஜெயலலிதாவின் ஆத்மாவை தொடர்பு கொண்டு பேசி அவர்களின் ஆசியைப் பெற்று வருகிறேன். ஆவிகளுடன் பேசுவது என்பது மிகப்பெரிய அறிவியல். அது ஒரு விஞ்ஞானம். இறந்தவர்களின் ஆவி உடன் தொடர்பு கொண்டு பேசும் விஞ்ஞானத்தை நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
ஜெயலலிதாவின் பாராட்டுகளைப் பெற்றவன் நான். அவர் உடன் கட்சியில் இணைந்து பணியாற்றும் போதே அவரிடம் பணம் வாங்கி செலவு செய்யாத ஒரே ஆள் நான் தான். ஒரு டீ வாங்கினால் கூட வவுச்சர் போட்டுக் கொடுப்பவன் என எனது நேர்மைக்கு ஜெயலலிதாவிடம் இருந்து பாராட்டு வாங்கி உள்ளேன். அதனால் தான் இப்போது என் உடன் அவர் ஆவி பேசுகிறது.
நாம் அமாவாசை போன்ற தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது எல்லாம் இறந்தவர்களின் ஆத்மாவை சாந்திபடுத்துவதற்காகத் தான். இதுகுறித்து விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்பவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சி மையம் வைத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்து வருகிறார். நான் ஜெயலலிதா மற்றும் எனது தந்தை ஆகியோரின் ஆவிகளுடன் பேசி ஆசிர்வாதங்களைப் பெற்று வருகிறேன்.
நான் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. பொய் சொல்லவில்லை. மற்றவர்கள் நம்பிக்கையைக் கெடுப்பது போல் யாரும் செயல்படக் கூடாது என்று தான் நான் சொல்வேன்" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
