'மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்'... '4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி'... 'வீட்டில் என்னவெல்லாம் இருக்கு'... தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேதா இல்லம் அரசுடைமையாக்கியது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இல்லத்தில் உள்ளவைகள் என்ன? என்பதைத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இடம் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன், வேதா இல்லம். சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்திற்குப் பல தேசிய தலைவர்கள் உட்படப் பல தலைவர்கள் வந்து சென்றுள்ளார்கள். ஜெயலலிதா இருக்கும் வரை மிகுந்த பாதுகாப்புடனும், பரபரப்புடனும் காணப்பட்ட போயஸ் கார்டன், தற்போது ஆழ்ந்த அமைதியில் உள்ளது.
இதனிடையே ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்படும் எனத் தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அது தற்போது அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வேதா இல்லம் தங்களுக்கு உரிமையானது என்றும், தாங்கள்தான் ரத்த சொந்தம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எனவே போயஸ் இல்லத்தைக் கையகப்படுத்தும் பணிகள் தாமதமானது.
இதையடுத்து, கடந்த மே மாதம் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் 36 கோடி ரூபாய் வருமான வரிப் பாக்கி இருப்பதால் அவரது இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்தது.
இருப்பினும் தனது முடிவில் உறுதியாக இருந்த தமிழக அரசு, வேதா இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு தொகையாக ரூ 67.90 கோடியை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது. இந்த இல்லத்திற்கு உரியவர்கள், தேவைப்பட்டால் இழப்பீடு தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தீபா தரப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, அதுகுறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் இல்லத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது குறித்த தகவல்களைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, வேதா இல்லத்தில் 4 கிலோ தங்கம் உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட ஒட்டு மொத்தமாக 32 ஆயிரத்து 721 பொருட்கள், 11 தொலைக்காட்சிகள், 38 குளிர்சாதனப் பெட்டிகள், 29 தொலைப்பேசிகள், ஓட்நர் உரிமம், வருமான வரி உள்ளிட்ட 653 ஆவணங்கள், துணிகள், போர்வைகள் என 10 ஆயிரத்து 448 பொருட்கள், 8376 புத்தகங்கள் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
#TNGovt lists the movable properties inside #jayalalithaa's Poes Garden residence before it's take over.
— Mugilan Chandrakumar (@Mugilan__C) July 29, 2020
Properties including 4Kg #gold,601 Kg Silver, 8376 books and 11 television sets. pic.twitter.com/zfah996GUM