அச்சுறுத்தும் ஓமிக்ரோன்.. ‘ஆதாரம் கிடைச்சிருக்கு’.. தடுப்பூசி போட்டவங்களும் எச்சரிக்கையாக இருக்கணும்.. WHO தலைவர் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்டெல்டா வைரஸை விட ஓமிக்ரோன் வேகமாகப் பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரோன், டெல்டா வகை வைரஸை விட வேகமாக பரவி வருகிறது. இது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே நோய்த்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவர்களையும் தாக்கி வருகிறது. டெல்டா வைரஸை விட ஓமிக்ரோன் வேகமாகப் பரவுவதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன’ என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங், ஓமிரோன் வைரஸ் பரவல் குறித்து பேசியுள்ளார். அதில், ‘ஓமிக்ரோன் வைரஸ் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் தெரியவில்லை. அது தொடர்பாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் குறித்து மூன்று கேள்விகள் எழுந்துள்ளன. அது எவ்வளவு வேகமாக பரவக்கூடியது? ஏற்கனவே உள்ள தடுப்பு ஊசிகளை கொண்டு அதை தடுக்க முடியுமா? மற்ற வகை வைரஸ்களை விட இது எவ்வளவு வீரியம்? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
தற்போது நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி ஓமிக்ரோன் வைரஸ், டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது. அதனால் அனைவரும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும்’ என பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.