"மொத்தமா 1000 பவுண்டு இருந்துருக்கு.." ஆற்றில் மீனவர் கண்ட 'விஷயம்'.. வறட்சிக்கு மத்தியில் இத்தாலியில் உருவான 'பதற்றம்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்வரலாறு காணாத அளவில், ஐரோப்பிய நாடுகளில் தற்போது வெப்ப நிலை காரணமாக மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.

அதே போல, கடும் வெப்பம் காரணமாக ஏராளமான மக்களும் உயிரிழந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், வரலாறு காணாத அளவுக்கு வறட்சியும் ஏற்பட்டுள்ளது.
இதனால், அங்குள்ள நீர் நிலைகளும் வறண்டு போய், நீர் வளங்களும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், இத்தாலி நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, அங்குள்ள போ ஆறு, வறண்டு போன நிலையில் அதற்குள் கடும் அதிர்ச்சியான விஷயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போர் முடிந்து, சுமார் 74 ஆண்டுகள் ஆகியும் தற்போது அதன் தாக்கம் பல நாடுகளில் உணரப்பட்டு தான் வருகிறது.
மேலும், இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத பல குண்டுகள், இத்தனை ஆண்டுகள் கழித்தும் நிறைய இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருவதால், இன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் அவ்வப்போது சில பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, இத்தாலி நாட்டிலுள்ள போ ஆறு வறண்டு போயுள்ளது.
அந்த வகையில், நீர் வறண்டதன் காரணமாக, போர்கோ, வெர்ஜிலியோ பகுதியில் கடந்த இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பவுண்டு எடை கொண்ட இந்த வெடிகுண்டை கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் மீனவர் ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக, இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து, வெடிகுண்டை மீட்ட ராணுவம், மெட்டோல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றினர்.
முன்னதாக, இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பாக, அப்பகுதியில் வசிக்கும் சுமார் 3,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, அதனை சுற்றியுள்ள பகுதிகளில், ரெயில், சாலை உள்ளிட்ட போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வான்வெளி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
ஏற்கனவே, சுமார் 80 ஆண்டுகளுக்கு இல்லாத வறட்சியில் இத்தாலி பாதிக்கப்பட்டு வரும் ஒரு சூழ்நிலைக்கு மத்தியில், இரண்டாம் உலக போரின் பயன்படுத்தப்பட்ட குண்டு, தற்போது கண்டுபிடிக்கப்பட்டது இன்னும் சற்று பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
