‘என்னது மறுபடியும் மொதல்ல இருந்தா..!’.. ஒரு வருசம் கழிச்சு வூகானில் வேகமாக பரவும் கொரோனா.. சீனா எடுத்த அதிரடி முடிவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் தொடங்கிய சமயத்தில் சீனாவில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். தீவிரமான கட்டுப்பாடுகள், அதிகப்படியான சோதனைகள் உள்ளிட்டவைகளால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த சமயத்தில், சீனா இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட வூகான் மாகாணத்தில், ஒரு வருடம் கழித்து மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு புதிதாக 73 போருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 53 பேருக்கு உள்ளூரை சேர்ந்த ஒருவர் மூலமே பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. திடீரென நோய் தொற்று அதிகரிக்க டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் மீண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வூகான் மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.