இல்ல புரில.. பொம்மையை கல்யாணம் செஞ்சு.. குட்டி பொம்மைக்கு அம்மா ஆகிவிட்டதாக அறிவித்த பெண்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், ragdoll எனப்படும் பொம்மையை திருமணம் செய்திருந்த நிலையில், தனக்கு குட்டி பொம்மை பிறந்திருப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார் அவர்.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ். 37 வயதான இவர் தனக்கு நண்பர்கள் இல்லை என்றும், தன்னுடன் நடனமாட யாருமில்லை எனவும் தனது தாயிடம் கூறியிருக்கிறார். இதனால் அந்த தாயும் பொம்மை ஒன்றை தயார் செய்து அதற்கு மார்செலோ எனப் பெயரிட்டு தனது மகளிடம் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், மார்செலோ பொம்மையுடன் நெருக்கமாக பழகிவந்த ரோச்சா, அதன்மீது காதல் கொண்டதாக சொல்லி அனைவரையும் திகைப்படைய வைத்தார்.
திருமணம்
தான் மார்செலோவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சொல்லிய ரோச்சா, சொன்னபடியே அதனை திருமணமும் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 250 பேர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பேசிய ரோச்சா,"எங்களது திருமண நாள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. மார்செலோ எனக்கு மிகவும் பொருத்தமானவர். திருமணத்தின் போது கைகோர்த்து நடந்தது என்னுடைய வாழ்வின் மிகச் சிறந்த தருணமாகும்" என்றார்.
இதனையடுத்து, இந்த தம்பதி பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிற்கு தேன் நிலவுக்கு சென்றனர். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வந்த நிலையில், தான் குட்டி பொம்மையை பெற்றெடுத்திருப்பதாக தற்போது தெரிவித்திருக்கிறார் ரோச்சா.
பிரசவம்
தனது பிரசவம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் முன்னிலையில் நடைபெற்றதாக கூறுகிறார் ரோச்சா. இதுகுறித்து பேசிய அவர்," எங்களது வீட்டிலேயே எனது பிரசவம் நடைபெற்றது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பத்திரமாக குழந்தையை வெளியே எடுத்தார்கள். எனக்கு 35 நிமிடங்களுக்கு பிரசவ வலி இருந்தது. சிலர் இதனை பொய் எனக் கூறுவது வேதனையளிக்கிறது. சில சமயங்களில் இது என்னை கோபப்படுத்துகிறது. எனது பெற்றோர் என்னை நேர்மையானவராக வளர்த்தார்கள். நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
இந்நிலையில், குட்டி பொம்மையை கையில் சுமந்தபடி, அமர்ந்திருக்கும் ரோச்சாவின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.