உக்ரைன் விவகாரம் எதிரொலி.. ரஷ்ய அமைச்சர் பேச ஆரம்பிச்சதும் நடந்த சம்பவம்.. ஐநா சபையில் நடந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐநா சபையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசத்தொடங்கியதும் பல நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது 8-வது நாளாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரேனின் தலைநகரான கீவ்வை கைப்பற்ற ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. அதனால் அங்கு தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இரு நாடுகளிலும் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைத்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை. அதனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐநா சபையில் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது ரஷ்யா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெ லவ்ரொவ் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். அவர் ஏற்கனவே பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ ஐநா சபையில் ஒளிபரப்பப்பட்டது.
வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல நாடுகளில் உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். இதனால் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் காணொளி காட்சி வீடியோவை பார்க்க யாரும் இல்லாமல் தனியாக ஒடிக்கொண்டிருந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தூதர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் ரஷ்ய அமைச்சரின் பேச்சை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.